முழு அடைப்பு: சாலை மறியல் ஈடுபட்ட இடதுசாரிகள் கைது

முழு அடைப்பு போராட்டத்தையொட்டி, புதுச்சேரியில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட இடதுசாரிக் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

முழு அடைப்பு போராட்டத்தையொட்டி, புதுச்சேரியில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட இடதுசாரிக் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
 நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸார் நடத்தி வரும் முழு அடைப்பு போராட்டத்துக்கு இடதுசாரிக் கட்சியினர் ஆதரவு தெரிவித்து பங்கேற்றனர்.
 இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் இணைந்து புதுச்சேரியில் 5 இடங்களிலும், காரைக்காலில் ஓர் இடத்திலும் திங்கள்கிழமை பேரணி மற்றும் மறியல் போராட்டம் நடத்தினர்.
 புதுச்சேரி நெல்லித்தோப்பு சுப்பையா சிலையில் இருந்து ஊர்வலமாக புதிய பேருந்து நிலையம் வந்தனர். அவர்கள் சாலையில் அமர்ந்தும், படுத்தும் வாகனங்கள் செல்ல முடியாதவாறு மறியலில் ஈடுபட்டனர்.
 இதனால் இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் சிரமமடைந்தனர்.
 அப்போது, அந்த வழியாக வந்த புதுச்சேரி தலைமை நீதிபதியும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் தலைமை நீதிபதியின் காரை மாற்று வழியில் அனுப்பி வைத்தனர். பின்னர், போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை கலைந்து செல்லுமாறு போலீஸார் கேட்டுக்கொண்டனர். ஆனால், அவர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டதால் 4 பெண்கள் உள்பட 60 க்கும் மேற்பட்டோரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.
 போராட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலத் தலைவர் சலீம், முன்னாள் செயலாளர்கள் விஸ்வநாதன், நாரா.கலைநாதன், நிர்வாகிகள் அபிஷேகம், முருகன், சேது செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 இவர்கள் சென்ற பிறகு மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில் மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் 30- க்கும் மேற்பட்டோர் புதிய பேருந்து நிலையம் அருகே மறியலில் ஈடுபட்டனர்.
 இதில் ஆட்டோ ஓட்டுநர்கள், சமையல் எரிவாயு முகமை ஊழியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
 இதுபோன்று, பாகூர், வில்லியனூர், மண்ணாடிப்பட்டு, சேதராப்பட்டு உள்ளிட்ட இடங்களில் மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
 சோசியலிஸ்ட் யுனைடெட் கம்யூனிஸ்ட் இண்டியா (சுசி) கட்சி சார்பில், புதுச்சேரியில் 5 இடங்களில் மறியலில் ஈடுபட்ட அக்கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
 வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு அக்கட்சியின் மாநிலச் செயலாளர் லெனின்துரை தலைமை வகித்தார். அரியாங்குப்பத்தில் முத்து தலைமையிலும், சிவாஜி சிலை அருகே பிரளயன், நாகராஜன் ஆகியோர் தலைமையிலும், சேதராப்பட்டில் சிவகுமார் தலைமையிலும், காரைக்காலில் பிலால் தலைமையிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com