ஐந்தாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு: புதுச்சேரியில் அக். 12-இல் தொடக்கம்

ஐந்தாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு புதுச்சேரியில் அக். 12 முதல் 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஐந்தாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு புதுச்சேரியில் அக். 12 முதல் 
14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுகுறித்து புதுச்சேரியில் அந்த மாநாட்டின் அமைப்பாளர் வி.ஆர்.எஸ்.சம்பத் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
தொழிலதிபர்கள்,  வர்த்தகர்கள்,  தொழில் புரிய விரும்புபவர்கள்,  சுய வேலைவாய்ப்பில் ஈடுபடும் இளைஞர்கள், தொழில் துறையில் வெற்றிக் கொடி நாட்டியவர்கள் ஆகியோர் சந்திப்புக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து வர்த்தகம் பெருக,  முதலீடுகளை ஈர்க்க,  பொருளாதார வளர்ச்சிக்காக விருப்பத் தொழிலை வகுத்தளிக்கவும் உலகளாவிய ஒத்துழைப்புக்கு ஒரு இணைப்பு பாலத்தை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டு உலகத் தமிழர் பொருளாதார மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இதன் முதலாவது மாநாடு கடந்த 2009-ஆம் ஆண்டு சென்னையில் நடத்தப்பட்டது. இரண்டாவது மாநாடு 2011-இல் துபையிலும்,  மூன்றாவது மாநாடு 2016-இல் சென்னையிலும்,  நான்காவது மாநாடு 2017-இல் தென் ஆப்பிரிக்க நாட்டின் டர்பனிலும் நடைபெற்றது. ஐந்தாவது உலகத் தமிழர் மாநாடு புதுச்சேரியில் அக். 12-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
சங்கமித்ரா மாநாட்டு அரங்கில் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழர்களான கயானா நாட்டு  பிரதமர் வீராசாமி நாகமுத்து,  மோரீஷஸ் நாட்டு குடியரசுத் தலைவர் பரமசிவம் பிள்ளை வையாபுரி,  புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி,  முதல்வர் நாராயணசாமி,  தமிழக அமைச்சர்கள் மாஃபா கே.பாண்டியராஜன்,  சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இந்த மாநாட்டில் தொழில் முனைவோர்,  வர்த்தகத் துறையினர்  தொழில் புரிவோரின் வளர்ச்சிக்காக வங்கிகள்,  நிதி நிறுவனங்கள், நிதியுதவி செய்யும் அமைப்புகள் மூலம் நிதியுதவி பெற வசதி வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும்.  
பொருளாதார வளர்ச்சியை எட்ட பல்வேறு நாடுகளில் உள்ள வேலைவாய்ப்புகள்,  விருப்பத் தொழில்புரிய வாய்ப்புகளை வகுத்தளித்தல் போன்றவை மாநாட்டின் முக்கிய அம்சமாக இருக்கும். 
இந்த மாநாட்டின் இறுதி நாளில் "உலகத் தமிழர் மாமணி விருது' 12 பேருக்கு வழங்கப்பட உள்ளதாக சம்பத் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com