காரைக்கால் செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்படுமா?

காரைக்கால் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஸ்ரீ செவ்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

காரைக்கால் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஸ்ரீ செவ்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

காரைக்கால் அரசு பொதுமருத்துவமனை வளாகத்தில் 1908-ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் உள்ளது. மருத்துவமனை கட்டுமானங்கள் நடைபெற்றபோது, விநாயகர் கோயிலுக்கு என குறிப்பிட்ட பகுதியை ஒதுக்கிவிட்டு கட்டுமானம் செய்யப்பட்டது. காரைக்கால் பகுதியை சேர்ந்த நன்கொடையாளர்கள் உதவியுடன் 1988-ஆம் ஆண்டு கோயில் குடமுழுக்கு செய்யப்பட்டது. இக்கோயில், அவசரச் சிகிச்சைப் பிரிவு அருகில் உள்ளது. இதுதவிர, மருத்துவமனை வளாகத்தில் கிறிஸ்துவர்கள் வழிபாடு செய்யும் வகையிலான தலமும் உள்ளது. நோயாளிகள், உதவியாளர்கள் பிரார்த்தனை செய்துகொள்ளவும்,, மருத்துவமனையிலிருந்து குணமாகி வெளியேறும்போது காணிக்கைகள் செலுத்துவதும் வழக்கத்தில் உள்ளது.
வழிபாட்டுக்கேற்ப கோயில் அமைக்கப்பட்டு, குடமுழுக்கு செய்யப்பட்டுவிட்ட பிறகு தொடர்ந்து சுவாமிக்கு பூஜைகள் நடத்தப்படுவது கட்டாயமாகிறது. ஆனால் பூஜைகள் முறையாக நடைபெறுவதோ குறிப்பாக, ஆண்டுதோறும் நடக்கும் விநாயகர் சதுர்த்தி நாளில் சிறப்பு வழிபாடுகள் யாவும் மருத்துவமனையிலிருக்கும் நோயாளிகளுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாதவாறு நடத்துவதுதில் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தக் கோயிலில் 1988-ஆம் ஆண்டு குடமுழுக்கு நடந்ததாக கோயிலில் பதிக்கப்பட்டிருக்கும் கல்வெட்டில் உதவி இயக்குநர் ஒருவரது பெயரும், மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளராக அப்போது இருந்தவர் பெயரும் பதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அரசு நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு திருப்பணிகள் 
செய்து, குடமுழுக்கு நடந்திருப்பது உறுதியாகிறது.
12 ஆண்டுகளுக்கொரு முறை கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தவேண்டும் என்பது ஐதீகம்.
இந்தக் கோயிலில் குடமுழுக்கு நடைபெற்று 30 ஆண்டுகளாகும் நிலையில், திருப்பணிகள் செய்து குடமுழுக்கு செய்யவேண்டும், தினமும் ஆகம விதிகளின்படி பூஜைகள் நடத்தவேண்டும், இதற்கான பணிகளை தொடங்கவேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள், பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆன்மிக ஈடுபாடு கொண்டோர், திருப்பணிக்கு உதவி செய்வோர் உள்ளிட்டோர் அரசு நிர்வாகத்துடன்  பேச்சு நடத்தி, கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தவும், கோயிலை நிர்வகிக்க உரிய குழு அமைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com