புதுச்சேரி அருகே வைரஸ் காய்ச்சலால் 70 பேர் பாதிப்பு: 7 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி

புதுவை மாநிலம், கிருமாம்பாக்கம் அருகேயுள்ள பிள்ளையார்குப்பம் கிராமத்தில் 70-க்கும் மேற்பட்டோர் வைரஸ் காய்ச்சால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுவை மாநிலம், கிருமாம்பாக்கம் அருகேயுள்ள பிள்ளையார்குப்பம் கிராமத்தில் 70-க்கும் மேற்பட்டோர் வைரஸ் காய்ச்சால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 இவர்களில் 7 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக பகலில் வெயில், இரவில் மழை என காலநிலையில் மாற்றம் இருந்து வருகிறது.
 இந்தப் பருவநிலை மாற்றம் காரணமாக, கிருமாம்பாக்கம் அருகேயுள்ள பிள்ளையார்குப்பம் கிராமத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. காய்ச்சலுக்கு 70-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 பாதிக்கப்பட்டோர் கிருமாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக குவிந்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், காய்ச்சல் குணமடையாத காரணத்தால் ஒரு குழந்தை உள்பட ஏழு பேர் செவ்வாய்க்கிழமை புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தில்லியில் இருக்கும் நலத் துறை அமைச்சர் கந்தசாமி இதுகுறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக நடவடிக்கை எடுக்க அந்தத் துறை அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார். அதன்பேரில், பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 இதனிடையே, சுகாதாரத் துறை துணை இயக்குநர் (பொது மருத்துவம்) ரகுநாதன் தலைமையில் மருத்துவக் குழுவினர் பிள்ளையார்குப்பம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக வெளி மாநில ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
 இதுகுறித்து ஏம்பலம் தொகுதி எம்.எல்.ஏ.வும், நலத் துறை அமைச்சருமான கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பில், பிள்ளையார்குப்பத்தில் 70-க்கும் மேற்பட்டோர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்தவுடன் சுகாதாரத் துறை அதிகாரிகள், மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அந்தக் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். மேலும், அந்தப் பகுதியில் புதன்கிழமை மருத்துவ முகாம் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 பாதிக்கப்பட்டவர்களை சுகாதாரத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளார் கந்தசாமி.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com