நடா புயலாலும் பலத்த மழை இல்லை: விவசாயிகள் விரக்தி

நடா புயல் காரணமாக பலத்த மழை பொழியும் என்று எதிர்பார்த்த, விழுப்புரம் மாவட்ட விவசாயிகள், குறைந்த மழைப் பொழிவினால் விரக்தி அடைந்துள்ளனர்.
நடா புயலாலும் பலத்த மழை இல்லை: விவசாயிகள் விரக்தி

நடா புயல் காரணமாக பலத்த மழை பொழியும் என்று எதிர்பார்த்த, விழுப்புரம் மாவட்ட விவசாயிகள், குறைந்த மழைப் பொழிவினால் விரக்தி அடைந்துள்ளனர்.
வானம் பார்த்த பூமியான மாவட்டத்தின் பல பகுதிகளில் மழையை நம்பியே வேளாண் பணிகள் நடைபெறுகின்றன. இந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழையை நம்பியே, வேளாண் பணிகளை விவசாயிகள் தொடங்கினர். ஆனால், தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை குறைந்த அளவே பெய்ததால், வறட்சியைத் தாங்கி விளையக்கூடிய சிறுதானிய பயிர்களுக்குக்கூட மழை போதுமானதாக இல்லை.
இதனால், மாவட்டம் முழுவதும் உள்ள விளை நிலங்களெல்லாம் கரம்புக் காடுகளாக காட்சியளிக்கின்றன. கால்நடைகள் மேய்ச்சலுக்குக்கூட புல், பூண்டுகள் தலைகாட்டவில்லை. கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகளோ வாங்கிய கடன்களை அடைக்க முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், பருவமழையை நம்பி, இடுபொருள்களை வயலில் விளைத்துவிட்டதால், தற்போது இடுபொருள்களும் கையிருப்பு இல்லாமல், இனி மழைப் பொழிந்தாலும்கூட, பயிர் செய்ய இயலாத நிலைமைக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை நடா புயல் பாதிப்பினால், திடீர் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மாவட்டத்தில் சொற்ப அளவே மழை பெய்ததால் விவசாயிகள் விரக்தி அடைந்தனர்.
எனவே, மாவட்டத்தை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து, விவசாயிகளுக்கான பயிர்க் காப்பீட்டுத் தொகையாக, ஏக்கருக்கு ரூ. 21 ஆயிரமாக மத்திய அரசு உயர்த்தி வழங்க வேண்டும்.
ஒருவேளை அடுத்தடுத்த நாள்களில் கனமழைப் பொழிவு ஏற்பட்டால், விவசாய இடுபொருள்களை இலவசமாகவோ அல்லது குறைந்த விலையிலோ, மானியத்துடன் கூடிய கடனாகவோ வழங்கி, மாவட்டத்தின் வேளாண் மேம்பாட்டுக்கு வழிவகுக்க வேண்டும் என்று இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com