ரூ.1800 கோடி நிலுவைத் தொகையை பெற்று தரக் கோரி சென்னையில் அக்.25-இல் கோட்டை முன் கரும்பு விவசாயிகள் போராட்டம்

ரூ.1800 கோடி நிலுவைத் தொகையை சர்க்கரை ஆலைகளிடம் இருந்து பெற்றுத் தர வலியுறுத்தி, சென்னையில் வருகிற 25ஆம் தேதி கோட்டை முன் போராட்டம் நடத்தப்படும் என்று கரும்பு விவசாய சங்கத்தினர் தெரிவித்தனர்.
ரூ.1800 கோடி நிலுவைத் தொகையை பெற்று தரக் கோரி சென்னையில் அக்.25-இல் கோட்டை முன் கரும்பு விவசாயிகள் போராட்டம்

ரூ.1800 கோடி நிலுவைத் தொகையை சர்க்கரை ஆலைகளிடம் இருந்து பெற்றுத் தர வலியுறுத்தி, சென்னையில் வருகிற 25ஆம் தேதி கோட்டை முன் போராட்டம் நடத்தப்படும் என்று கரும்பு விவசாய சங்கத்தினர் தெரிவித்தனர்.

 தமிழக கரும்பு விவசாய சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம், விழுப்புரம் கரும்பு விவசாயிகள் மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

 ஈரோடு மாவட்ட அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் பி.காசியண்ணன் தலைமை வகித்தார்.

 தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் கே.பாலகிருஷ்ணன், துணைத் தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் எம்எல்ஏ ராமமூர்த்தி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலர் டி.ரவீந்திரன், துணைத் தலைவர் செ.நல்லாக்கவுண்டர், மாநிலச் செயலர் கோபிநாத், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநிலத் தலைவர் கே.தெய்வசிகாமணி உள்ளிட்டோர் கரும்பு நிலுவைத் தொகையைப் பெற அரசை வலியுறுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்.

 கூட்டத்துக்குப் பிறகு கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியது:
 தமிழக கரும்பு விவசாயிகள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். கரும்பு ஆலைகள், கடந்த 3 ஆண்டுகளாக தமிழக அரசு அறிவித்த ஆதார விலையை (எஸ்ஏபி) தர மறுத்து வருகின்றது.

 கரும்பு ஆலைகளில் ரூ.1,800 கோடி அளவில் கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்காமல் உள்ளது.

 மத்திய அரசு அறிவித்த ஆதார விலையையும் சில ஆலைகள் தராமல் உள்ளது. அரசின் கூட்டுறவு ஆலைகளும் ரூ.800 கோடி அளவில் பாக்கி வைத்துள்ளன.

 இதற்கெல்லாம் வட்டி போட்டால் ரூ.700 கோடி அளவில் வருகிறது. கரும்பை வழங்கிவிட்டு பணம் கிடைக்காமல் வாங்கிய கடனுக்கு விவசாயிகள் வட்டி செலுத்தி வருகின்றனர்.

 ஆனால், வாங்கிய கடனை செலுத்தவில்லை என்று விவசாயிகளின் பொருள்களை ஏலத்தில் விடுகின்றனர். நிலுவைத் தொகையைக் கேட்டு பலகட்ட போராட்டங்கள் நடத்தியும் வழங்கப்படவில்லை.

 அதனால், கடைசி கட்டப் போராட்டமாக அக்.25-ஆம் தேதி சென்னை கோட்டை முன் போராட்டம் நடத்த உள்ளோம். மாநில அரசு நிலுவைத் தொகையைப் பெற்றத்தர வலியுறுத்தியும், நிகழாண்டுக்கான ஆதார விலையை அறிவிக்க கேட்டும் காத்திருப்புப் போராட்டம் நடைபெறும்.

 இதற்கு அனைத்து அரசியல் கட்சியினரின் ஆதரவைப் பெற்று, அவர்களுடன் கரும்பு விவசாயிகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.

 தற்போது, சர்க்கரை விலை உயர்ந்து, ஆலை விலையாக டன் ரூ.38 ஆயிரம் வரை விற்கிறது. இதர வகையிலும் ஆலைக்கு வருமானம் கிடைக்கிறது. அதனால், சர்க்கரை ஆலைகள் தட்டிக்கழிப்பதை ஏற்க முடியாது என்றார் அவர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com