இதயநோயைத் தடுக்க இயற்கை உணவு, உடற்பயிற்சி அவசியம்: அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அறிவுரை

இதயநோயைத் தடுக்க இயற்கை உணவு மற்றும் உடற்பயிற்சி அவசியம் என அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அறிவுறுத்தினார்.
இதயநோயைத் தடுக்க இயற்கை உணவு, உடற்பயிற்சி அவசியம்: அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அறிவுரை

இதயநோயைத் தடுக்க இயற்கை உணவு மற்றும் உடற்பயிற்சி அவசியம் என அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அறிவுறுத்தினார்.

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக இதய தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மருத்துவக் கல்லூரி இதயநோய் பிரிவு மையத்தில் நடைபெற்ற விழாவுக்கு மருத்துவக் கண்காணிப்பாளர் சிவக்குமார், நிலைய மருத்துவ அலுவலர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கல்லூரி முதல்வர் பி.வசந்தாமணி தலைமை வகுத்து பேசியதாவது: உலக இதய கூட்டமைப்பு சார்பில் செப்டம்பர் 29-ஆம் தேதி இதய தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் உயிரைப் பறிக்கும் கொடுமையான நோயாக இதய நோய் (மாரடைப்பு) உள்ளது.

உலகளவில் ஆண்டுக்குச் சராசரியாக 1 கோடியே 70 லட்சம் பேர் இதய நோயால் உயிரிழக்கின்றனர். இது புற்று நோயால் ஏற்படும் உயிரிழப்பைவிட இரு மடங்காகும்.

இந்தியாவில் ஏற்படும் உயிரிழப்புகளில் 3-இல் ஒரு பங்கு மாரடைப்பால் நிகழ்கிறது.
 
மாரடைப்பு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், உடல் பருமன், புகைப் பழக்கம், போதைப் பழக்கம், அதிக கொழுப்புள்ளவர்களுக்கும், பரபரப்புடன் கூடிய வாழ்க்கை முறையை மேற்கொள்பவர்களுக்கும் இந்நோயால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

மாரடைப்பு வராமல் தடுக்க சர்க்கரை, கொழுப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அசைவ உணவுகளை அதிகம் சாப்பிடக் கூடாது. காய்கறி உள்ளிட்ட இயற்கை உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

புகை, மது பழக்கம் ஆகியவற்றை விடுத்து, தினமும் அரை மணி நேரம் நடைப் பயிற்சி அல்லது ஓட்டப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள், வருடத்துக்கு ஒருமுறையேனும் இ.சி.ஜி. பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

திடீரென அதிக வியர்வையுடன் இடது பக்கமாக நெஞ்சு வலி ஏற்படுதல், மயக்கமடைதல் போன்றவை மாரடைப்புக்கான அறிகுறியாகும்.

அவ்வாறு ஏற்படும்போது, உடனே மருத்துவரை அணுகி முதலுதவி சிகிச்சைப் பெற வேண்டும். தொடர்ந்து, மருத்துவர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். இதற்காக அரசு மருத்துவமனைகளில் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகிறது என்றார்.

மருத்துவர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com