பொது வேலைநிறுத்த நாடகத்தை மக்கள் ஏற்கமாட்டார்கள்: மதிமுக

திமுகவின் பொது வேலைநிறுத்த நாடகத்தை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று மதிமுக விமர்சித்துள்ளது.

திமுகவின் பொது வேலைநிறுத்த நாடகத்தை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று மதிமுக விமர்சித்துள்ளது.

இதுகுறித்து, மதிமுக மாநில சட்டத்துறை துணைச் செயலர் பி.எஸ்.மன்னப்பன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழக விவசாயிகள் வாழ்வாதாரத்திற்காக, புதுதில்லியில் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு என்ற போர்வையில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், அனைத்துக் கட்சி என்ற நாடக மேடையைக் கூட்டி, ஏப்.25-ல் முழு அடைப்பு போராட்டம் அறிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் விவசாயிகளின் வாக்குகளைப் பெற்று பதவியில் உள்ள ஸ்டாலின் உள்ளிட்ட 233 எம்எல்ஏக்கள், 39 எம்பிக்கள், மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு, தமிழக விவசாயிகள் மீது அக்கறை இருந்தால், விவசாயிகளுடன் சேர்ந்து புதுதில்லியில் போராடி பாராளுமன்றத்தையே முடக்கி இருக்க வேண்டும்.

இதனை செய்யாமல், முழு அடைப்பு போராட்டம் என்று, தமிழக மக்களை ஏமாற்றும் திமுகவின் செயலை மக்கள் ஏற்கமாட்டார்கள். இப்போராட்டம் மக்களுக்கு துன்பத்தைத் தருமே தவிர தீர்வு காண உதவாது.

இதனால், பொது வேலை நிறுத்தத்தை விடுத்து, அதே நாளில் திமுக கூட்டணி கட்சிகளுடன், புதுதில்லியில் விவசாயிகளோடு சேர்ந்து, போராட்டத்தில் பங்கேற்று பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும்.

இதனை செய்யமாட்டார்கள் என்பதால், பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com