விழுப்புரம் அரசு மகளிர் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கை நிறைவு

விழுப்புரம் அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் கட்ட மாணவிகள் சேர்க்கைக் கலந்தாய்வில்

விழுப்புரம் அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் கட்ட மாணவிகள் சேர்க்கைக் கலந்தாய்வில் 190 இடங்களும் நிரம்பியதால், கூடுதல் இடங்களை ஏற்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
 விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் மாணவிகள் அதிகளவில் படித்து வருவதால், தனியாக மகளிர் கல்லூரி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் முயற்சியால், விழுப்புரத்தில் அரசு மகளிர் கல்லூரியை தமிழக அரசு அறிவித்ததுடன் நிகழாண்டு முதலே செயல்படவும் அனுமதி அளித்தது.
 இதற்காக, விழுப்புரம் காமராஜ் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தாற்காலிகமாக 10 வகுப்பறைகள் ஒதுக்கப்பட்டு பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.எஸ்சி. கணிதம் (ஆங்கில வழி), பி.எஸ்சி. கணினி அறிவியல் (ஆங்கில வழி), பி.காம். வணிகவியல் (ஆங்கில வழி) ஆகிய படிப்புகளுடன் செயல்பட உள்ளது.
 நிகழாண்டு (2017-18 ) மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 9 வரை விநியோகிக்கப்பட்டன. அதனை, மகளிர் கல்லூரி இல்லாததால் பிளஸ்2
 }வுடன் படிப்பை நிறுத்தி வீட்டிலிருந்த மாணவிகள், அண்ணா கலைக் கல்லூரியில் இடம் கிடைக்காத மாணவிகள், தனியார் கல்லூரியில் பயில வசதி இல்லாத மாணவிகள் உள்பட 1,300 பேர் வாங்கினர். அதில், 970 பேர் பூர்த்தி செய்து விண்ணப்பித்தனர்.
 இவர்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில், பி.எஸ்சி. கணினி அறிவியல் பாடத்துக்கு 30 இடங்களுக்கும், மற்றப் படிப்புகளுக்கு தலா 40 இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெற்றது. மொத்தம் 190 இடங்களே ஒதுக்கப்பட்டு நடைபெற்ற இந்தக் கலந்தாய்வில், விண்ணப்பித்த 5-இல் 4 பங்கு மாணவிகளுக்கு இடம் கிடைக்கவில்லை. மிகக் குறைந்த இடங்களே இருந்ததால், கலந்தாய்வு தொடங்கிய முதல் நாளிலேயே நிறைவடைந்தது. இதனால் பெரும்பாலான மாணவிகள் ஏமாற்றமடைந்தனர்.
 இதுகுறித்து கல்லூரி முதல்வர் ரவிசங்கர் கூறியதாவது: கல்லூரி புதிதாக தொடங்கப்பட்டுள்ளதால், அரசு அனுமதி மட்டுமே கிடைத்துள்ளது. பல்கலைக்கழக அனுமதி கிடைக்கவில்லை. வாய்மொழியாகவே பல்கலைக்கழக அனுமதி பெற்று, மாணவிகள் சேர்க்கை நடத்தப்பட்டுள்ளது. இதனால் முதல்கட்ட கலந்தாய்வில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன்பிறகு, பல்கலைக்கழக அதிகாரிகள் வந்து பார்வையிட்டு அனுமதி அளித்த பிறகு, கூடுதல் மாணவிகள் சேர்க்கைக்கு அனுமதி கோரப்படும். பல்கலைக்கழக அனுமதி கிடைத்தால்தான் அடுத்தக் கட்ட கலந்தாய்வு நடத்தப்படும் என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com