விழுப்புரம் ரயில்வே மேம்பாலம் ஆகஸ்ட் 15 - இல் திறக்கப்படுமா?

விழுப்புரத்தில் சீரமைப்புப் பணிக்காக மூடப்பட்ட ரயில்வே மேம்பாலம் வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விழுப்புரத்தில் சீரமைப்புப் பணிக்காக மூடப்பட்ட ரயில்வே மேம்பாலம் வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 விழுப்புரம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம், அதன் கீழ் செல்லும் கால்வாய் சீரமைப்புக்காக கடந்த மே 28-ஆம் தேதி மூடப்பட்டு பணிகள் தொடங்கின. ரூ.2 கோடி நிதி ஒதுக்கீட்டில் நடைபெறும் இப்பணி 4 மாத காலத்தில் முடிக்க திட்டமிடப்பட்டது.
 இப்பணியின் ஒரு பகுதியாக மேம்பாலத்தின் கீழ் செல்லும் கால்வாய் புதிதாகக் கட்டப்பட்டதுடன், ரயில்பாதைக்கு கீழே செல்லும் கால்வாய் தூர்வாரப்பட்டு, பக்கச் சுவர்கள் எழுப்பப்பட்டன.
 பணிகள் விரைவாக நடைபெற்று வந்ததால் மேம்பாலம் முன்கூட்டியே திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஒரு முறை, இப்பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன், ஆகஸ்ட் 15-ஆம் தேதி மேம்பாலம் திறக்கப்படலாம் எனத் தெரிவித்தார்.
 இதனிடையே, பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்த நிலையில், கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி மேம்பாலம் திறக்கப்படும் என்று எதிர்பார்ப்பு கூட நிலவியது. ஆனால், அதுவும் நிறைவேறவில்லை. இதனிடையே, விழுப்புரம் நகரில் கடந்த சில தினங்களாக மாலை, இரவு நேரங்களில் மழை பெய்து வருவதாலும், பணிகள் முழுமை பெறாததாலும் மேம்பாலம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி திறக்கப்படவும் வாய்ப்பில்லாத நிலையே உள்ளது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைகள் துறை உதவிக் கோட்டப் பொறியாளர் அம்பிகா கூறியதாவது: மேம்பால சீரமைப்பின் பிரதான பணிகள் முடிந்துள்ளன. தற்போது, பாதுகாப்பு வேலைகள் நடைபெறுகின்றன. அதாவது, மேம்பாலத்தின் பக்கப்பகுதி சரியாமல் இருக்க சிறு கான்கிரீட் சுவர்கள் எழுப்புவது, கருங்கல் அடுக்குவது போன்ற பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. தற்போது மேம்பாலத்தின் மீது ஜல்லிகள் போடப்பட்டுள்ளன. தற்போது பெய்யும் மழை பணியை தாமதப்படுத்தினாலும் தரத்தை மேம்படுத்தும். இந்த மழையால் சாலையில் கொட்டப்பட்ட மண் நன்றாக படியும். அடுத்து ஒரு முறை ஜல்லிக் கலவை கொட்டப்படும். அதன்பிறகே தார்ச் சாலை அமைக்கப்படும். இப்பணிகள் முடிவடைய ஒரு வாரம் முதல் 10 நாள்கள் வரை ஆகலாம் என்றார்.
 மேம்பாலம் திறப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் கூறியதாவது: பணிகளை நேரில் ஆய்வு செய்து, அதிகாரிகளிடம் ஆலோசித்த பிறகே மேம்பாலம் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com