உதகையைச் சேர்ந்த இளைஞர் கடலில் மூழ்கி சாவு

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே கடலில் குளித்த உதகமண்டலத்தைச் சேர்ந்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே கடலில் குளித்த உதகமண்டலத்தைச் சேர்ந்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவருடன் கடலில் குளித்த மேலும் இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் அருகே உள்ள எடையப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ரகு(28). தையல் தொழிலாளி. இவர் தனது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த அசோக்குமார்(25), பிரதீப்(25) உள்ளிட்ட 10 பேருடன், இரு தினங்களுக்கு முன்பு, பழனி முருகன் கோயிலுக்கு நடைபயணமாக வந்துள்ளனர்.
தொடர்ந்து, பழனியிலிருந்து, சுற்றுலா செல்வதற்காக திட்டமிட்டு வேன் மூலம் புதுவைக்கு வந்துள்ளனர். புதுவையில் சனிக்கிழமை தங்கியிருந்த அவர்கள், மாலை 3 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு, அருகே உள்ள தமிழகப் பகுதியான விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்துள்ள பொம்மையார்பாளையம் கடற்கரைப் பகுதிக்கு வந்து கடலில் குளித்தனர்.
அப்போது, கடல் அலையில் ரகு உள்ளிட்ட மூவரும் அடித்துச் செல்லப்பட்டனர். இதனைப் பார்த்த உடன் வந்தவர்கள் கூச்சலிட்டனர். தகவல் அறிந்து வந்த காவல் ஆய்வாளர் பிரதீப்குமார் தலைமையிலான ஆரோவில் போலீஸார், மீனவர்கள் உதவியுடன் கடலில் அடித்துச் செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கடலில் மூழ்கி இறந்த நிலையில் ரகுவின் சடலம் மட்டும் மீட்கப்பட்டது.
இதனையடுத்து, அவருடன் கடலில் குளித்து அடித்துச் செல்லப்பட்ட அசோக்குமார், பிரதீப் ஆகியோரை தேடும் பணியில் இரவு வரை மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர்.
விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், சம்பவ இடத்தை பார்வையிட்டு, கடலில் மூழ்கியவர்களை மீட்கும் பணியை விரைவுபடுத்தினார். எனினும், கடலில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் இரவு வரை கிடைக்கவில்லை.
ஆரோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ரகுவின் உடலை மீட்டு காலாப்பட்டு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com