எல்லீஸ் சத்திரம் சாலையை ஆக்கிரமிக்கும் லாரிகள்

விழுப்புரம் எல்லீஸ் சத்திரம் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் லாரிகளால் போக்குவரத்து இடையூறு தொடர்கிறது.

விழுப்புரம் எல்லீஸ் சத்திரம் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் லாரிகளால் போக்குவரத்து இடையூறு தொடர்கிறது.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறி சென்னை, கடலூர், திருவண்ணாமலை பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் திருச்சி சாலை வழியாக எல்லீஸ் சத்திரம் சாலையில் சென்று, புறவழிச் சாலையை அடைகின்றன. இதே போல, திருச்சி, சேலம் மார்க்கப் பேருந்துகளும் புறவழிச் சாலை வழியாக எல்லீஸ் சத்திரம் சாலைக்கு வந்து விழுப்புரம் பேருந்து நிலையத்தை அடைகின்றன. இதனால், விழுப்புரம் நகரில் திருச்சி சாலைக்கு அடுத்த பிரதான சாலையாக எல்லீஸ் சத்திரம் சாலை அமைந்துள்ளது.
ஏற்கெனவே, சென்னை சாலை, புதுவை சாலையில் மேம்பாலம் பணிகள் நடைபெறுவதால், எல்லீஸ் சத்திரம் சாலை வழியாகவே பேருந்துகள், கனரக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஏராளமான வாகனங்கள் சென்று வரும் காரணத்தால், குண்டும், குழியுமாக இருந்த சாலை மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்தச் சாலையின் இருபுறமும் ஏராளமான லாரிகள், கார்கள் நிறுத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையோரங்களை லாரிகள், முள்புதர்கள் ஆக்கிரமித்துள்ளதால் இப்பகுதியில் நகைப் பறிப்பு போன்ற சமூக விரோத சம்பவங்களும் தொடர்கிறது. குறிப்பாக இங்குள்ள தனியார் மதுபான தொழிற்சாலை எதிரே நீண்ட தொலைவுக்கு லாரிகள் இருபுறமும் நாள் முழுவதும் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
இந்தச் சாலையில் இரு மார்க்கங்களிலும் பேருந்துகள், வாகனங்கள் செல்லும்போது நெரிசல் ஏற்படுகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் வருவோர் விபத்தில் சிக்குகின்றனர். பாதசாரிகள் அச்ச உணர்வுடன் நடந்து செல்கின்றனர். வழுதரெட்டியை சுற்றியுள்ள நகர குடியிருப்புவாசிகளும், திருப்பச்சாவடிமேடு, கப்பூர், திருவெண்ணெய்நல்லூர் உள்ளிட்ட கிராம மக்களும் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். நகரப் பேருந்துகளும் செல்கின்றன.
எனவே, இந்தச் சாலையில் நிறுத்தப்படும் லாரிகள் உள்ளிட்ட வாகனங்களை நெரிசலைத் தவிர்க்க மாற்று இடத்துக்கு அனுப்ப வேண்டும். மதுபான ஆலைக்கு அதிகளவில் லாரிகள் வந்து செல்வதால் நிர்வாகத்தினர் தனியாக வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடமும், காவல் துறையினரிடமும் பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள். மேலும், இந்தச் சாலையில் வீரன் கோயில் சந்திப்பு, புறவழிச் சாலை சந்திப்பு பகுதிகளில் உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட வேண்டும் என தொகுதி எம்பியிடம் கோரிக்கை வைத்து காத்துள்ளதாக தெரிவித்தனர்.
இது குறித்து, போக்குவரத்து காவல் துறையினரிடம் கேட்டபோது, எல்லீஸ் சத்திரம் நெடுஞ்சாலையோரம் லாரிகளை நிறுத்தக் கூடாதென்று ஏற்கெனவே எச்சரித்துள்ளோம். இதுகுறித்து உரிய நிறுவனத்தினரிடமும் தெரிவித்துள்ளோம். இருப்பினும் தொடர்ந்து கண்காணித்து வாகனங்கள் அப்புறப்படுத்தப்படும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com