தொடர் விடுமுறை: வாகனங்கள் அணிவகுப்பால் சுங்கச் சாவடிகளில் நெரிசல்

தொடர் விடுமுறையையொட்டி, சென்னை மற்றும் வட மாவட்ட மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் வெள்ளிக்கிழமை இரவு முதல் கடும் வாகன நெரிசல்

தொடர் விடுமுறையையொட்டி, சென்னை மற்றும் வட மாவட்ட மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் வெள்ளிக்கிழமை இரவு முதல் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
தமிழகத்தில், இரண்டாவது சனிக்கிழமை (ஆக.12), ஞாயிற்றுக்கிழமை (ஆக.13), திங்கள்கிழமை (ஆக.14) கோகுலாஷ்டமி, செவ்வாய்க்கிழமை சுதந்திர தினம் (ஆக.15) எனத் தொடர்ந்து 4 நாள்கள் விடுமுறையாக அமைந்துள்ளதால், வெளியூர்களில் தங்கி அரசு, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர்.
குறிப்பாக, சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு பெரும்பாலான மக்கள் திரும்புவதால், பிரதான சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்தன. வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை இரவு வரை விடுமுறைக்காக ஊர்களுக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், வழி நெடுகிலும் சுங்கச் சாவடிகளில் வாகன நெரிசல் காணப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விக்கிரவாண்டி சுங்கச் சாவடியில் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் வாகன நெரிசல் தொடங்கியது. தொடர்ந்து, சனிக்கிழமை அதிகாலை 4 மணி வரை சென்னை வழித் தடத்திலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களை நோக்கி ஏராளமான சொகுசுப் பேருந்துகள், கார்கள், வேன்கள், சிறப்புப் பேருந்துகள் அணிவகுத்ததால் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் வரிசையில் நின்றன. இதனையடுத்து, சுங்கச் சாவடி ஊழியர்கள் கூடுதலாக 3 பாதைகளை திறந்து, 9 பாதைகளில் திருச்சி வழித்தட வாகனங்களை அனுப்பி வைத்து, போக்குவரத்து நெரிசலை சமாளித்தனர்.
இதே போல, சனிக்கிழமை காலை 7 மணி முதல் 10 மணி வரை மீண்டும் வாகனங்கள் அதிகளவில் வந்தன. தொடர்ந்து, வாகனங்கள் அதிகளவில் வருகை இருந்தது. மீண்டும் சனிக்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையும் அதிகளவில் வாகனங்கள் அணிவகுத்து வந்தன.
இந்த நேரங்களில் தொடர்ந்து, மொத்தமுள்ள 12 பாதைகளில், 9 பாதைகளை திருச்சி வழித்தட வாகனங்களுக்கு அனுமதித்தனர்.
இதே போல, விழுப்புரம் மாவட்டத்தில் ஓங்கூர் சுங்கச் சாவடி, உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, மொரட்டாண்டி சுங்கச் சாவடிகளிலும், தொடர்ந்து, வெள்ளிக்கிழமை இரவு, சனிக்கிழமை காலை மற்றும் மாலை நேரங்களிலும் இரு மடங்கு வாகனங்கள் அணிவகுத்தன.
சென்னை, திருப்பதிக்கு சிறப்புப் பேருந்துகள்
தொடர் விடுமுறையையொட்டி, விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில், சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம் வழித்தடங்களிலும், திருப்பதிக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து விழுப்புரம் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: விழுப்புரம் மண்டலத்திலிருந்து, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, புதுவை உள்ளிட்டப் பகுதிகளிலிருந்து சென்னைக்கு வழக்கமாக 60-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனுடன் கூடுதலாக 150 பேருந்துகள் வெள்ளிக்கிழமை முதல் சிறப்புப் பேருந்துகளாக இயக்கப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து, பயணிகள் வருகையைப் பொறுத்து புதன்கிழமை வரையும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். இதே போல், விடுமுறை தினங்களில் திருப்பதிக்கு பக்தர்கள் பயணிப்பது அதிகரித்துள்ளதால், விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களிலிருந்தும், திருப்பதிக்கு கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்கான கால அட்டவணை அந்தந்த போக்குவரத்து பணிமனைகளில் தெரிந்துகொள்ளலாம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com