பொதுமக்களுக்கு மருத்துவ சேவையாற்ற வாழ்நாள் முழுவதும் பயில வேண்டும்: ஜிப்மர் இயக்குநர் அறிவுரை

பொது மக்களுக்கு மருத்துவ சேவையாற்ற செவிலியர்கள் வாழ்நாள் முழுவதும் மருத்துவத்தைப் பயில வேண்டும் என்று ஜிப்மர் இயக்குநர் பரிஜா அறிவுறுத்தினார்.

பொது மக்களுக்கு மருத்துவ சேவையாற்ற செவிலியர்கள் வாழ்நாள் முழுவதும் மருத்துவத்தைப் பயில வேண்டும் என்று ஜிப்மர் இயக்குநர் பரிஜா அறிவுறுத்தினார்.
விழுப்புரம் வி.சாலை இ.எஸ்.செவிலியர் கல்லூரி முதலாவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு கல்லூரிச் செயலாளர் எஸ்.செந்தில்குமார் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஹேமமாலினி வரவேற்றார். இ.எஸ்.கல்விக்குழும பதிவாளர் கஸ்தூரிபாய் தனசேகரன் முன்னிலை வகித்தார்.
புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் சுபாஷ் சந்திர பரிஜா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, 93 செவிலியர் பட்டப்படிப்பு முடித்த கல்லூரி மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது: செவிலியர் பணி சமுதாயத்துக்கு முக்கியத்துவமானது. இப்பணியை சேவையோடும், திறமையாகவும் மேற்கொள்ள வேண்டும். உலகளவில் செவிலியர்களின் சேவைப்பணி முதலில் இந்தியாவில் தான் தொடங்கியது. கி.பி.700 ஆம் நூற்றாண்டுகளில் இச்சேவைகள் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இரண்டாம் நூற்றாண்டுகளில் அசோக மன்னர் காலத்தில் மருத்துவ சேவை மையங்களை தொடங்கியுள்ளனர். அவர்கள், நெடுந்தொலைவு பயணம் செய்வோருக்கு ஏற்படும் பிணிகளைப் போக்க மூலிகை, காய்கறிகள், பழங்கள் மூலம் மருத்துவத்தைத் தொடங்கியுள்ளனர். மருத்துவ சேவையால் நோயைக் குணப்படுத்த முக்கிய நான்கு தூண்களாக, மருத்துவர், நோயாளி, செவிலியர், மருந்துகள் உள்ளன. 18-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட போர்களின் போது, பிளாரன்ஸ் நைட்டிங்கேல் செவிலியத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தினார். செவிலியர்களின் பணி நோயாளர்களை காப்பது, நல்ல உடல் நலத்தைப் பேணுவது, நோய் வருமுன் காக்கும் பணிகளை மேற்கொள்வது போன்றவையாகும். இதற்காக, வளர்ந்து வரும் தொழில் நுட்பத்துடன் கூடிய மருத்துவத்தை, நாம் வாழ்நாள் முழுவதும் படித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
நாம் பெறும் மருத்துவக் கல்வி நல்ல நோக்கத்தில் இருக்க வேண்டும். அதனை தவறான வழியில் பயன்படுத்தக் கூடாது. கடின உழைப்போடு மருத்துவ சேவை செய்ய வேண்டும்.
மருத்துவ சேவைக்கான குழுக்கள் நகரம், கிராமத்துக்கும் சென்று செயல்பட வேண்டும. இவ்வுலகில் பிறந்த அனைவரும் சிறந்தவர்களே என்பதால், எவரிடமும் பாகுபாடு காண்பிக்கக் கூடாது. பெற்றோர்கள், மருத்துவர்கள், சக செவிலியர்களை மதித்து நடக்க வேண்டும. வேலையில் பணிவு, மரியாதையுடன் சேவையாற்ற வேண்டும்.
சுயநலத்துக்காக பணிகளை செய்யாமல், மருத்துவ சேவைக்காகவே நாம் அதிகமாக பணியாற்ற வேண்டும். நமக்குள் இருக்கும் திறமையை தேர்வு செய்து, அதன்படி சேவை செய்ய வேண்டும் என்றார். விழாவில் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர். கல்லூரி பேராசிரியர் பாரதி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com