வானூர் அருகே ஆதிபழங்குடியினர் குடியிருப்புக்கு தெரு மின் விளக்கு வசதி: தினமணி செய்தி எதிரொலி

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே அடிப்படை வசதியின்றி தவித்து வந்த ஆதிபழங்குடியின குடியிருப்பில் தினமணி செய்தி எதிரொலியாக ஒரே நாளில் தெரு மின் விளக்கு வசதி செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே அடிப்படை வசதியின்றி தவித்து வந்த ஆதிபழங்குடியின குடியிருப்பில் தினமணி செய்தி எதிரொலியாக ஒரே நாளில் தெரு மின் விளக்கு வசதி செய்யப்பட்டது.
 வானூர் அருகேயுள்ள ஆகாசம்பட்டு ஊராட்சி அச்சிரம்பட்டு பகுதி ஓடை புறம்போக்கு இடத்தில், ஆதிபழங்குடியினர் (பூம் பூம் மாட்டுக்காரர்கள்) வசித்து வருகின்றனர்.
 இங்குள்ள 22 குடும்பத்தினர், குடும்ப அட்டையின்றி, மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி தவித்து வருகின்றனர்.
 இந்தக் குடியிருப்பில் வசித்து வரும் 20-க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள், மின் விளக்கு இல்லாததால் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் துணை மின்நிலைய வாயில் பகுதி தெரு மின் விளக்கு வெளிச்சத்தில் இரவு நேரத்தில் வீட்டுப் பாடங்களைப் படித்து வருகின்றனர்.
 ஆதிபழங்குடியினருக்கு வீட்டுமனை, குடியிருப்பு, குடும்ப அட்டை, மின்சார வசதிகளை செய்து தர வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
 இதுதொடர்பாக, தினமணியில் வியாழக்கிழமை (டிச.7) விரிவாக செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் அச்சிரம்பட்டு ஆதிபழங்குடியின மக்களுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர உத்தரவிட்டார்.
 அதன்பேரில் வானூர் வட்டாட்சியர் பிரபாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள், அச்சிரம்பட்டு குடியிருப்புகளுக்குச் சென்று வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.
 அந்தக் குடியிருப்புப் பகுதியில் தெருமின் விளக்குகள் அமைக்கும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டது.
 அந்தக் குடியிருப்புகள் வழியாக சென்ற மின் கம்பங்களில் தெரு மின் விளக்குகளைப் பொருத்தி வியாழக்கிழமை மதியமே பணிகளை முடித்தனர்.
 மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையை, அந்தப் பகுதி குடியிருப்பு வாசிகள் வரவேற்று நன்றி தெரிவித்தனர்.
 இதுகுறித்து வானூர் வட்டாட்சியர் பிரபாகரன் கூறியதாவது:
 மாவட்ட ஆட்சியர் உடனடியாக அடிப்படை வசதிகளை ஏற்படுத்த உத்தரவிட்டதையடுத்து, அச்சிரம்பட்டில் ஆதிபழங்குடியினர் குடியிருப்புப் பகுதியில் தெரு மின் விளக்குகள் போடப்பட்டுள்ளது.
 மேலும், அவர்களிடமுள்ளஅடையாள அட்டைகளை வைத்து பதிவு செய்து, 20 பேருக்கு குடும்ப அட்டைகள் வழங்க வட்ட வழங்கல் துறையினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com