விழுப்புரம் அருகே போ மருத்துவர் கைது: ஆட்சியர் ஆய்வின் போது சிக்கினார்

விழுப்புரம் அருகே மாவட்ட ஆட்சியர் டெங்கு ஆய்வுப் பணி மேற்கொண்ட போது, சிந்தாமணி கிராமத்தில் மருத்துவப் படிப்பு படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் சிக்கினார்.

விழுப்புரம் அருகே மாவட்ட ஆட்சியர் டெங்கு ஆய்வுப் பணி மேற்கொண்ட போது, சிந்தாமணி கிராமத்தில் மருத்துவப் படிப்பு படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் சிக்கினார்.
 விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளை, தினமும் ஒவ்வொரு கிராமத்துக்கும் நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் ஆய்வு செய்து வருகிறார். விழுப்புரம் அருகே உள்ள சிந்தாமணி கிராமத்துக்கு, வியாழக்கிழமை நேரில் சென்ற ஆட்சியர், குடியிருப்புப் பகுதியில் தண்ணீர் தேங்கிய இடங்களைப் பார்வையிட்டு, கொசுப்புழு ஒழிப்புப் பணிகளை ஆய்வு செய்தார்.
 அப்போது, அந்தப் பகுதியில் பேட்டரியில் இயங்கும் சைக்கிளில், பெட்டியுடன் மருத்துவம் பார்க்கும் பணியில் ஒருவர் ஈடுபட்டிருந்தார். இவர் மீது சந்தேகமடைந்த மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளை அழைத்து அவரிடம் விசாரணை நடத்தும்படி கூறினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பிரியா, சுகாதாரத் துறை துணை இயக்குநர் சவுண்டம்மாள் உள்ளிட்டோர், அந்த நபரிடம் விசாரித்தனர். அவர் மயிலம் அருகே உள்ள எழாய் கிராமத்தைச் சேர்ந்த கென்னடி ராஜ்குமார் (60) என்பதும், முதுநிலை மருத்துவர் என்று கூறி, போலியாக மருத்துவம் பார்த்ததும் தெரிய வந்தது.
 மேலும், அவரிடம் விசாரித்த போது, பிளஸ் 2 மட்டுமே படித்துள்ள அவர், ஏற்கெனவே மருந்து விற்பனைப் பிரதிநிதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையில், அந்த அனுபவத்தின் பேரில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது.
 விக்கிரவாண்டி, மயிலம், விழுப்புரம் சுற்றுப் பகுதி கிராமங்களுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று, நடமாடும் மருத்துவராக அலோபதி மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இதையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
 இதைத்தொடர்ந்து, கென்னடி ராஜ்குமாரை விழுப்புரம் தாலுகா போலீஸில் ஒப்படைத்தனர். அவர் வைத்திருந்த மருத்துவ உபகரணங்கள், மருந்து, மாத்திரைகள் அடங்கிய பெட்டியை சுகாதாரத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
 இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கென்னடி ராஜ்குமாரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com