விழுப்புரத்துக்கு திரண்டு வந்து பேருந்தை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்

அரியலூர் கிராமத்துக்கு இயக்கப்படும் பேருந்துகளின் சேவை குறைக்கப்பட்டதால், அதிருப்தியடைந்த அப்

அரியலூர் கிராமத்துக்கு இயக்கப்படும் பேருந்துகளின் சேவை குறைக்கப்பட்டதால், அதிருப்தியடைந்த அப்
பகுதி மக்கள், விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்துக்கு திரண்டு வந்து அரசுப் பேருந்தை சிறைபிடித்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் அருகேயுள்ள அரியலூருக்கு, காணை, மாம்பழப்பட்டு, கோழிப்பட்டு வழியாக 3 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் 5-சி எண் கொண்ட பேருந்து காலை 5.30 மணிக்கும், 7.30 மணிக்கும், 25 எண் கொண்ட பேருந்து காலை 7.30 மணி, பகல் 11.30 மணி, இரவு 9.45 மணிக்கும், 33 எண் கொண்ட பேருந்து பகல் 1.30 மணி, பிற்கபல் 3.30 மணி, மாலை 5.45 மணி ஆகிய நேரங்களில் விழுப்புரத்திலிருந்து புறப்பட்டு அரியலூருக்குச் செல்லும். ஆனால், கடந்த சில வாரங்களாக 5-சி பேருந்து வருவதில்லையாம். அதேபோன்று, 25 எண் கொண்ட பேருந்து இரவு 9.45 மணிக்கும், 33 எண் கொண்ட பேருந்து மாலை 5.45 மணிக்கும் இயக்கப்படுவதில்லையாம்.
இதுபோல பேருந்துகளின் சேவை குறைக்கப்பட்டு, வேறு ஊர்களுக்கு அந்தப்பேருந்துகள் அனுப்படுகின்றனவாம். அதனால், அந்த பேருந்துகளை நம்பியுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிலாளிகள், வியாபாரிகள், நோயாளிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பாதிப்படைந்து வந்தனராம்.
இதுதொடர்பாக, போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் வலியுறுத்தியும், நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால், அதிருப்தியடைந்த அந்த கிராம மக்கள், வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணிக்கு விழுப்புரத்திலிருந்து அரியலூருக்கு வந்த 33 எண் கொண்ட பேருந்தில் ஏறி, விழுப்புரத்துக்கு திரண்டு வந்தனர்.
அங்கு ஏற்கெனவே, பேருந்துக்காக காத்திருந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், கிராம மக்கள் என அனைவரும் திரண்டு அதே பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து, விழுப்புரம் மேற்கு போலீஸார் நிகழ்விடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது: தற்போது இயக்கப்பட்டு வரும் பேருந்துகளின் எண்ணிக்கையும், சேவையும் போதுமானதாக இல்லாத நிலையில், அந்த எண்ணிக்கையை குறைப்பது வேதனையானது.
ஆகவே, எங்கள் ஊருக்கு இயக்கப்படும் பேருந்துகளை நாள் தோறும் தவறாமல் இயக்க வேண்டும். மாலை 5.45 மணிக்கு இயக்க வேண்டிய பேருந்தை அரியலூருக்கு அனுப்ப வேண்டும். மேலும், கூடுதலாக காலை 8.30 மணிக்கும், மாலை 4.30 மணிக்கும் பேருந்துகள் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக, போலீஸார் உறுதியளித்தனர். இதையடுத்து, கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com