விவசாயிகள் கட்டிய தடுப்பணையால் மலட்டாறில் நீர்வரத்து

விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் விவசாயிகள் கட்டிய தடுப்பணையால் மலட்டாற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் இந்த முயற்சியை புதுவை சட்டப்பேரவைத் தலைவர் நேரில் பார்வையிட்டு பாராட்டினார்.
விவசாயிகள் கட்டிய தடுப்பணையால் மலட்டாறில் நீர்வரத்து

விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் விவசாயிகள் கட்டிய தடுப்பணையால் மலட்டாற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் இந்த முயற்சியை புதுவை சட்டப்பேரவைத் தலைவர் நேரில் பார்வையிட்டு பாராட்டினார்.
 சாத்தனூர் அணையிருந்து வரும் தென்பெண்ணை ஆறு விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வழியாக சென்று கடலில் கலக்கிறது. விழுப்புரம் அருகே தளவானூர் பகுதியில் தென்பெண்ணை ஆறு கிளையாக பிரிந்து, மலட்டாறாக செல்கிறது.
 இந்த மலட்டாறு விழுப்புரம் மாவட்டப் பகுதிகளைக் கடந்து, புதுவை மாநிலம் மடுகரை, பாகூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்று கடலில் கலக்கிறது. பெரும் மழை வெள்ளக் காலங்களில் மட்டுமே மலட்டாறில் தண்ணீர் செல்வது வழக்கம். இதனால், கடந்த 15 ஆண்டுகளாக மலட்டாறு நீர்வரத்தின்றி வறண்டு கிடக்கிறது. தென்பெண்ணையில் மணல் அள்ளப்பட்டதால் பள்ளம் ஏற்பட்டு, மலட்டாறில் தண்ணீர் செல்வது பாதிக்கப்பட்டது. இதனால், மலட்டாறு நீரை நம்பிய 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில், வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டது.
 நீண்ட காலத்துக்குப் பிறகு, தென்பெண்ணை ஆற்றில் கடந்த மாதம் நீர்வரத்து இருந்ததால், அதை மலட்டாறில் திருப்பும் முயற்சியில் தளவானூரைச் சேர்ந்த மாற்றுத் திறன் விவசாயி தணிகைவேல், தனது சொந்த செலவில் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு வாய்க்கால் அமைத்து தண்ணீரை கொண்டு சென்றார். ஆனால், ஆற்றில் நீர்வரத்து நின்றதையடுத்து போதிய அளவில் தண்ணீர் வந்து சேரவில்லை.
 அண்மையில் பெய்த பலத்த மழையால், தென்பெண்ணையில் மீண்டும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், தணிகைவேல் தலைமையில் கிராம மக்கள் தண்ணீரை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, கடந்த ஒரு வார காலமாக தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே மண்மேடுகளை அமைத்து, தாற்காலிக அணையை ஏற்படுத்தி வருகின்றனர்.
 விவசாயிகள் சொந்த செலவில் தடுப்பணை: தளவானூர், பில்லூர், சேர்ந்தனூர், வடவாம்பலம், புதுவை மாநிலம் மடுகரை உள்ளிட்ட 50 கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு, தங்களது சொந்த செலவில், பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு, தளவனூர் அருகே பிரியும் தென்பெண்ணை ஆற்றில், 750 மீ. தொலைவில், 8 அடி உயரத்துக்கு மண் மேடுகளை அமைத்து தாற்காலிக தடுப்பணையைக் கட்டி வருகின்றனர்.
 இதனால், மலட்டாறில் திங்கள்கிழமையிலிருந்து தண்ணீர் திருப்பிவிடப்பட்டது. மேலும், தடுப்பணையைப் பலப்படுத்தி தண்ணீரை திருப்பி விடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
 அதேநேரத்தில், நிரந்தரமாக தடுப்பணையைக் கட்டி மலட்டாறில் தண்ணீர் செல்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
 புதுவை சட்டப் பேரவைத் தலைவர் பார்வையிட்டார்: விழுப்புரம் மாவட்டத்திலிருந்து செல்லும் மலட்டாற்றின் பெரும்பகுதி புதுவை மாநில விவசாயத்துக்கும் கை கொடுத்து வருகிறது. விவசாயிகளின் முயற்சியை அறிந்த புதுவை மாநில சட்டப் பேரவைத் தலைவர் வி.வைத்திலிங்கம், திங்கள்கிழமை மாலை தளவானூருக்கு வந்து தடுப்பணையைக் கட்டும் பணியைப் பார்வையிட்டார். மேலும், விவசாயி தணிகைவேல் உள்ளிட்டோரின் முயற்சிக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
 அப்போது அவர் கூறியதாவது:
 விவசாயிகளின் இந்த முயற்சி மகத்தான சாதனையாகும். புதுவை மாநிலமும் மலட்டாறால் பாசன வசதி பெறுகிறது. விவசாயிகளின் இந்த முயற்சிக்கு என்னால் இயன்ற உதவியும், புதுவை அரசு மூலமும் உதவி செய்யப்படும்.
 இது தமிழகப் பகுதி என்பதால், நேரடியாக நாங்கள் எதையும் செய்ய முடியாது. தமிழக அரசின் நடவடிக்கைகளை கேட்டறிந்து, புதுவை அரசும் உரிய உதவியை செய்யும். ஆற்று நீர் நேரடியாக கடலில் கலந்து வீணாவதைத் தடுத்து, இதுபோல பயனுள்ள சிறு, சிறு கட்டமைப்பு பணிகளை செய்ய வேண்டும்.
 மலட்டாறில் 300 அடி உயரத்துக்கு மணல் வளம் உள்ளதால், இதில் தண்ணீர் செல்லும் போது நிலத்தடி நீர் உயர்ந்து, குடிநீர், விவசாயம் பயன்பெறும் என்பதால், விவசாயிகளின் முயற்சி பாராட்டத்தக்கது என்றார்.
 அவருடன் புதுவை பொதுப் பணித் துறை செயற்பொறியாளர் தாமரைபுகழேந்தி, உதவி பொறியாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com