பணியிலிருந்து விலகிய ஆசிரியை கல்வித் துறை மீது புகார்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே போராட்டம் நடத்தி ராஜிநாமா செய்த ஆசிரியை கல்வித் துறை மீது புகார் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே போராட்டம் நடத்தி ராஜிநாமா செய்த ஆசிரியை கல்வித் துறை மீது புகார் தெரிவித்தார்.
 திண்டிவனத்தைச் சேர்ந்தவர் அ.சபரிமாலா. வைரபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். கடந்த செப்.6-ஆம் தேதி, அந்தப் பள்ளி முன்பு அங்கு படித்து வரும் தனது மகனுடன் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
 அரசு ஊழியராக இருந்துகொண்டு, அனுமதியின்றி போராட்டம் நடத்தக் கூடாதென அறிவுறுத்தப்பட்டதால், போராட்டத்தைக் கைவிட்டார். இதைத் தொடர்ந்து, செப்.7-ஆம் தேதி, தனது பணியை ராஜிநாமா செய்தார்.
 இந்த நிலையில், விழுப்புரம் தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை சபரிமாலா வந்தார். கல்வித் துறையின் தாமத நடவடிக்கைகள் குறித்து புகார் தெரிவித்து, தொடக்கக் கல்வி அலுவலரிடம் புகார் மனு அளித்தார்.
 அதில் கூறியிருப்பதாவது: எனது ராஜிநாமாவைத் தொடர்ந்து, தொடக்கக் கல்வி அலுவலர் கடந்த அக்.25-ஆம் தேதி அனுப்பிய கடிதம் எனக்கு தாமதமாக டிச.9-ஆம் தேதிதான் கிடைத்தது.
 அந்த கடிதத்தில், எனது பெயரின் தலைப்பெழுத்து தவறுதலாக "அ' என்பதற்குப் பதில் "எ' என ஆங்கிலத்திலும், எனது மகன் பெயரின் தலைப்பெழுத்து "ஜெ'-க்கு பதில் "ஜே' என ஆங்கிலத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் எழுத்துகள் தவறாகவும் இடம் பெற்றுள்ளது. இதன்மூலம் அரசு இயந்திரம் எந்தளவுக்கு அலட்சியமாக இயங்குகிறது என்பது தெளிவாகிறது.
 நான் மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதிகேட்டுதான், எனது பணியை ராஜிநாமா செய்தேன். நாடு முழுவதும் ஒரே கல்விக் கொள்கையை வலியுறுத்தி ராஜிநாமா செய்ததாக கல்வி துறை அனுப்பிய கடிதத்தில் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனது வருங்கால வைப்பு நிதி கணக்கு முடித்து இறுதித் தொகையை வழங்கும் தேதியைக் குறிப்பிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
 இது குறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மதிவாணன் கூறியதாவது:
 சபரிமாலாவின் வீட்டு முகவரி இல்லாததால், கல்வித் துறையின் கடிதம், உதவி தொடக்க கல்வி அலுவலகம் மூலம் அவர் பணியாற்றிய பள்ளிக்கு அனுப்பப்பட்டது. பிறகு வீட்டு முகவரியைத் தேடிப் பிடித்து, வீட்டுக்கு அனுப்பியதில் தாமதமாகியிருக்கலாம்.
 அலுவலக தட்டச்சர் ஆளில்லாததால், புதியவர் மூலம் தட்டச்சு செய்து அனுப்பியதில், பிழை ஏற்பட்டதாகத் தெரிகிறது. திருத்தப்பட்ட புதிய கடிதம் அனுப்பி வைக்கப்படும் என்று அவரிடம் தெரிவித்துள்ளோம் என்றார்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com