விவசாயிகள் வாழை பயிரிட்டு லாபம் பெற ஆட்சியர் அறிவுரை

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மாற்றுப் பயிராக வாழை பயிரிட்டு லாபம் பெறலாம் என்று ஆட்சியர் அறிவுறுத்தினார்.
விவசாயிகள் வாழை பயிரிட்டு லாபம் பெற ஆட்சியர் அறிவுரை

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மாற்றுப் பயிராக வாழை பயிரிட்டு லாபம் பெறலாம் என்று ஆட்சியர் அறிவுறுத்தினார்.
விழுப்புரத்தில் தோட்டக்கலை துறை சார்பில் வாழை சாகுபடி குறித்த கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தொடக்கி வைத்துப் பேசியது:
தமிழகத்தில் வாழை சாகுபடியில் திருச்சி மாவட்டம் முதலிடத்தையும், தூத்துக்குடி இரண்டாம் இடத்தையும், திருநெல்வேலி  மூன்றாம் இடத்தையும் வகிக்கிறது.
 சேலம், மதுரை, வேலூர், கடலூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி மாவட்டங்களிலும் வாழை அதிக அளவில் பயிரிடப்படுகிறது. வாழை, காய், தண்டு, பழம் என   உணவாகப் பயன்படுகிறது. தண்டுகள் கால்நடைத் தீவனமாகவும் பயன்படுத்தப்படுகின்றன. இவை மருத்துவ குணம் கொண்டதாகும்.
வாழையில் பூவன், ரஸ்தாளி, மொந்தன், கற்பூரவள்ளி, ரொபஸ்டா, மோரிஸ், நேந்திரன், செவ்வாழை, மலைவாழை  கோ-1 போன்ற பல்வேறு வகைகள் உள்ளன.  நீர் வழி உரமிடுதல், உயிரி உரமிடுதல், பாசனம், பக்கக் கன்றுகள் நீக்குதல், ஊடு பயிரிடுதல் மூலம் வாழை சாகுபடியில் நல்ல லாபம் பெறலாம்.
 விழுப்புரம் மாவட்டம், அதிக விவசாய நிலப்பரப்பளவு கொண்டதாகும். ஆனால், மழையின்மையால் விவசாயிகள் வருவாய் இழப்பில் உள்ளனர். இந்த நிலையை கருத்தில் கொண்டு வாழை பயிரிட்டு வருவாய் பெற இந்தக் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்துள்ளோம். இதிலுள்ள தொழில் நுட்பங்களைப் பின்பற்றி வாழை சாகுபடி செய்து  பயன்பெற வேண்டும்.
மாவட்டத்தில் 4.5 லட்சம் ஹெக்டர் விவசாய நிலம் உள்ளது. இதில், 33 ஆயிரம் ஹெக்டர் தோட்டப் பயிர் செய்கின்றனர். ஆனால், 456 ஹெக்டர் மட்டுமே வாழை பயிரிடும் நிலை உள்ளது. ஆகையால், தேனி உள்ளிட்ட மாவட்டங்களைப் போல் வாழை பயிரிட்டு லாபம் பெற வேண்டும் என்றார்.
தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் மணிமொழி வரவேற்றார். தொடர்ந்து, வேளாண் இணை இயக்குநர் கார்த்திகேயன், திட்ட ஒருங்கிணைப்பாளர் ஷீபா, தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கருப்பையா, மேலாண்மை இயக்குநர் அஜீதன் உள்ளிட்டோர் வாழை சாகுபடி குறித்து விளக்க உரையாற்றினர். விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com