விழுப்புரத்தில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் சோதனை: ரூ.2 லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

விழுப்புரத்தில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில், கடையின் மாடியில் பதுக்கி வைத்திருந்த

விழுப்புரத்தில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில், கடையின் மாடியில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
 விழுப்புரம் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் கு.வரலட்சுமி தலைமையில், உணவுப் பாதுகாப்பு வட்டார அலுவலர்கள் சங்கரலிங்கம், ரவிக்குமார், கதிரவன், சையத்இப்ராகிம், ஜெயராஜ், ரமேஷ் உள்ளிட்ட குழுவினர் விழுப்புரம் நகரில் வெள்ளிக்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
 காந்தி வீதி, நேரு வீதி, பாகர்ஷா வீதிகளில் உள்ள மளிகைக் கடைகள், மொத்த மளிகை வியாபாரக் கடைகள் உள்ளிட்ட 52 கடைகளில் சோதனையிட்டனர். அப்போது, பாகர்ஷா வீதியில் இரண்டாவது மாடியில் இயங்கி வரும் தனியார் சிகரெட் கிடங்கில், நாராயணன் என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்ததாம். அங்கிருந்த தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா, புகையிலைப் பொருள்கள் 300 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து, உணவுப் பாதுகாப்புத் துறையினர், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்த நாராயணனின் கிடங்கை மூடி, சீல் வைத்தனர். மேலும், உணவுப் பாதுகாப்புத் துறை சட்ட விதிகள்படி அவருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினனர்.
 அந்த கிடங்கில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களின் மதிப்பு ரூ.2 லட்சமாகும்.
 விழுப்புரம் நகரில் தொடர்ந்து தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பிடிபட்டு வருகின்றன. குறிப்பாக, பாகர்ஷா வீதியில் அடுத்தடுத்த கிடங்குகளில் புகையிலைப் பொருள்கள் அண்மைக் காலமாக பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
 இதுதொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாததால், மீண்டும் தாராளமாக புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தொடர்வதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
 எனவே, தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள், புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து, 3 மடங்கு வரை விலையை உயர்த்தி விற்பனை செய்யும் வியாபாரிகள், கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com