விழுப்புரம் அரசு மருத்துவமனையில் இரு தரப்பினரிடையே மோதல்: நோயாளிகள் அலறி ஓட்டம்

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை மாலை இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தால் நோயாளிகள் அதிர்ச்சியடைந்தனர்.

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை மாலை இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தால் நோயாளிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த மோதல் தொடர்பாக 2 பேரை பிடித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

விழுப்புரம் சிவன் படைத் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக், மீன் வியாபாரி. இவர், தனது பைக்கில் நேருஜி சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது, இவரது பைக்கும் எதிரே 3 பேர் வந்த பைக்கும் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் கார்த்திக் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது, அந்த 3 பேரும் கார்த்திக்கிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், அவரது வாயில் காயம் ஏற்பட்டது. அவரை அங்கிருந்த சிலர் மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, கார்த்திக்கிற்கு மருத்துவர்கள், செவிலியர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தனர்.

இதனிடையே, மோதல் குறித்து அறிந்த இரு தரப்பையும் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அங்கு குவிந்தனர். அவர்களில் ஒரு தரப்பினர் மருத்துவமனைக்குள் புகுந்து கார்த்திக்கை தாக்க முயன்றனர். இதனால், அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் அச்சமடைந்தனர்.

கூட்டமாக வந்த அவர்களை அங்கு பணியில் இருந்த காவலர் வெளியேறுமாறு அறிவுறுத்தினார். அப்போது, மருத்துவமனை நுழைவாயில் அருகே இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். இதில், சிலருக்கு ரத்தக்காயம் ஏற்பட்டது. இந்த மோதல் சம்பவத்தைக் கண்டு, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகள் அச்சமடைந்து நான்கு புறமும் சிதறி ஓடினர்.

இச்சம்பவம் குறித்து அறிந்த விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸார் விரைந்து வந்து மோதலில் ஈடுபட்டவர்களை தடுக்க முயன்றனர். அப்போது, மேற்கு காவல் நிலைய தலைமைக் காவலர் ஒருவரின் சட்டையை பிடித்து இளைஞர் ஒருவர் தாக்க முயன்றார். இதையடுத்து கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டு, அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்தினர்.

இந்த மோதல் தொடர்பாக 2 பேரை பிடித்து போலீஸார் விசாரணைக்காக, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில், அவர்கள் விழுப்புரம் அங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அரவிந்த்குமார்(23), பெரிய காலனி, ஜி.ஆர்.பி. தெருவைச் சேர்ந்த சந்துரு (21) ஆகியோர் எனத் தெரிய வந்தது.

காவல் நிலையம் அருகில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் இரு தரப்பினரிடையே சுமார் 30 நிமிடம் வரை நீடித்த இந்த மோதல் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com