குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள்
By விழுப்புரம், | Published on : 18th July 2017 08:28 AM | அ+அ அ- |
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தலைமை வகித்து, முதியோர் ஓய்வூதியத் தொகை, கல்விக் கடன், வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடுகள், திருமண உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், ஆக்கிரமிப்புகள் அகற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, பொது மக்கள் வழங்கிய 468 மனுக்களைப் பெற்றார்.
இவை அனைத்தையும் மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்து, விரைந்து மேல் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு வழங்கினார்.
மேலும் இந்தக் கூட்டத்தில், விக்கிரவாண்டி வட்டம் கப்பியாம்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த தேவநாதன் என்பவரின் மகன்கள் அமர்நாத், ஜெயகிருஷ்ணன் ஆகியோர் குளத்தில் மூழ்கி உயிரிழந்தமைக்காக, அவரது குடும்பத்தினருக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பிரியா, உதவி ஆட்சியர் (பயிற்சி) சிம்ரன்ஜீத் சிங் ஹ்லான், சமுக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் கி.ரஞ்சினி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அ.அனந்தராமன், மாவட்ட மேலாளர் (தாட்கோ) ரவி, மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்திரன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.