காவல் துறையினருக்காக நூலகம் திறப்பு

விழுப்புரம் அருகே காகுப்பம் ஆயுதப்படை வளாகத்தில் காவல் துறையினருக்கான பிரத்யேக நூலகம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

விழுப்புரம் அருகே காகுப்பம் ஆயுதப்படை வளாகத்தில் காவல் துறையினருக்கான பிரத்யேக நூலகம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
 இந்த ஆயுதப்படை வளாகத்தில் 450 போலீஸார் பணிபுரிகின்றனர். இவர்களுக்கான குடியிருப்பு, சிறுவர் பூங்கா போன்றவை அங்கேயே அமைந்துள்ளன. இங்கு நூலகமும் அமைக்க வேண்டும் என டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.
 இதைத் தொடர்ந்து, மாவட்ட நூலகத் துறை மூலம் அங்கு புதிதாக நூலகம் அமைக்கப்பட்டது. 500 புத்தங்களுடன் இந்த நூலகம், திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
 காகுப்பம் ஆயுதப்படை வளாகத்தில் திங்கள்கிழமை காலை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் பங்கேற்று நூலகத்தைத் திறந்து வைத்தார்.
 நிகழ்ச்சியில் அவர் பேசிதாவது: நல்ல புத்தகம் 100 நண்பர்களுக்குச் சமம். காவலர்கள் தங்களுக்கு கிடைக்கும் சிறிது நேரத்திலும் கூட நல்ல சிந்தனைகளை வளர்க்க வேண்டும். அதற்கு உதவுவது புத்தகங்களே. இயன்றவரை நூலகத்துக்கு வந்து புத்தங்களை எடுத்து படித்துப் பாருங்கள். அதன் மூலம் அறிவு வளரும். சமூகம் சீர்படும். இணைய தளத்தில் பல்வேறு நூல்கள் கிடைத்தாலும், புத்தங்களை எடுத்து வாசிப்பது என்பது நூலின் ஆசிரியருக்கும், படிப்பவருக்கும் பிணைப்பை ஏற்படுத்தும். கதைப் புத்தகங்கள், இலக்கியம், புதினம், சமையல் குறிப்பு, போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் என எதை வேண்டுமானாலும் காவலர்கள் படிக்கலாம். தேவையான புத்தகங்கள் குறித்து என்னிடம் கேட்டால், அதனை நூலகத்துக்கு வழங்க ஏற்பாடு செய்கிறேன் என்றார் அவர்.
 நிகழ்ச்சியில் பங்கேற்ற எஸ்.பி. ஜெயக்குமார் பேசியதாவது:
 உடல் பயிற்சி உடலைச் சீர்படுத்தும். புத்தகங்கள் சிந்தனையை சீர்படுத்தும். காவல் துறையினர் தங்களுக்கு நேரமில்லை என்பதை கூறுவதைத் தவிர்த்து, 5 நிமிடம் கிடைத்தாலும் அதிலும் புத்தகங்களை வாசிக்க முற்பட வேண்டும். காவலர்கள் மட்டுமின்றி அவர்தம் குடும்பத்தினரும் இந்த நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
 நூலகர்கள் வேல்முருகன், இளஞ்செழியன், முருகன், டி.எஸ்.பி. வெள்ளைச்சாமி, காவல் ஆய்வாளர் விஜயக்குமார், உதவி காவல் ஆய்வாளர் கிள்ளிவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com