தனி மணல் குவாரி: மாட்டு வண்டித் தொழிலாளர்கள் மனு

விழுப்புரம் மாவட்டத்தில் தங்களுக்கென தனி மணல் குவாரி அமைக்க வேண்டும் என்று மாட்டு வண்டித் தொழிலாளர்கள் திங்கள்கிழமை ஆட்சியரிடம் மனு அளித்து வலியுறுத்தினர்.

விழுப்புரம் மாவட்டத்தில் தங்களுக்கென தனி மணல் குவாரி அமைக்க வேண்டும் என்று மாட்டு வண்டித் தொழிலாளர்கள் திங்கள்கிழமை ஆட்சியரிடம் மனு அளித்து வலியுறுத்தினர்.
 விழுப்புரம் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாட்டு வண்டித் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள், தென்பெண்ணை, சங்கராபரணி, கெடிலம் ஆறுகளில் அனுமதியின்றி மணல் எடுத்து வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
 அண்மையில் மணல் கடத்தல் லாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதையடுத்து, மாட்டு வண்டிகள் அதிகளவில் மணல் எடுத்துச் சென்றதால், அதன் மீதும் போலீஸார், வருவாய்த்துறை, கனிம வளத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
 இதுபோன்று விழுப்புரம் உள்ளிட்டப் பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளைப் பிடித்து, மாட்டு வண்டித் தொழிலாளர்களை கைது செய்தனர்.
 இந்த நிலையில், விழுப்புரம், வளவனூர், கூட்டேரிப்பட்டு, விக்கிரவாண்டி சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த மாட்டு வண்டித்தொழிலாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர், திங்கள் கிழமை விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து தங்களுக்கென தனி மணல் குவாரி அமைக்கக் கோரி ஆட்சியர் இல.சுப்பிரமணியனிடம் மனு அளித்தனர்.
 சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.முத்துக்குமரன் தலைமையில் வந்த அவர்கள் கூறியதாவது: மாட்டு வண்டிகளுக்கு மணல் எடுக்க அனுமதி கேட்டு கடந்த 2013ஆம் ஆண்டு முதல் கோரிக்கை விடுத்து வருகிறோம். இடையே கடந்த 2014-ஆம் ஆண்டு பேச்சுவார்த்தை நடத்திய பொதுப்பணித்துறையினர், தனியாக 5 இடங்களில் மணல் குவாரி அமைத்து தருவதாக உறுதியளித்தனர். மூன்றாண்டுகளாகியும் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை.
 தற்போது, மாட்டு வண்டித் தொழிலாளர்கள் மீது வழக்கு போட்டு நடவடிக்கை எடுப்பதால், அவர்களது குடும்பங்கள் பாதித்துள்ளன. ஆகையால், ஏற்கெனவே தெரிவித்தபடி 5 இடங்களில் மாட்டு வண்டிகளுக்கு தனி மணல் குவாரி அமைத்து தர வேண்டும் என்றனர்.
 மனுவைப் பெற்ற ஆட்சியர் இல.சுப்பிரமணியன், இது தொடர்பாக கனிமவளம், வருவாய்த்துறையினருடன் ஆலோசிக்கப்பட்டது. விரைவில் இரு இடங்களில் மாட்டு வண்டிகளுக்கு தனியாக மணல் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com