விழுப்புரத்தில் ஜூலை 27,28-இல் காவலர் பணிக்கான உடல் தகுதித் தேர்வு

விழுப்புரத்தில் வருகிற ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள காவலர் பணிக்கான உடல் தகுதித் தேர்வில்,

விழுப்புரத்தில் வருகிற ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள காவலர் பணிக்கான உடல் தகுதித் தேர்வில், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 7,422 பேர் பங்கேற்கவுள்ளனர். இத்தேர்வு நடைபெறவுள்ள மைதானத்தை விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.
 தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் மூலம் இரண்டாம் நிலைக் காவலர், சிறைக் காவலர், தீயணைப்பு வீரர் ஆகிய பதவிகளில் காலியாக உள்ள 15,664 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு கடந்த மே 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வில் 4.82 லட்சம் பேர் பங்கேற்றனர்.
 இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை 7-ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு, அடுத்தக் கட்டமாக உடல் தகுதித் தேர்வு வருகிற ஜூலை 27-ஆம் தேதி தொடங்குகிறது.
 விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் தேர்வு எழுதியவர்களுக்கு விழுப்புரத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில், இந்த உடல் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது. வருகிற ஜூலை 27-ஆம் தேதி 1,500 மீட்டர் ஓட்டம், உடல் கூறு அளத்தல், 28-ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு, கயிறு ஏறுதல் உள்ளிட்ட உடல் திறன் சோதனைகளும் நடைபெற உள்ளன.
 இதில், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த மொத்தம் 7,422 பேர் பங்கேற்க உள்ளனர்.
 இத் தேர்வு நடைபெற உள்ள காகுப்பம் மைதானத்தை விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன், விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் ஆகியோர் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர்.
 பின்னர், செய்தியாளர்களிடம் டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் கூறியதாவது: ஐ.ஜி. முன்னிலையில் நடைபெற உள்ள உடல் தகுதித் தேர்வு முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படும்.
 கடந்த ஆண்டுகளில், வேலை வாங்கித் தருவதாகக் கூறி சிலர் மோசடி செய்ததாக புகார்கள் வந்தன. இதுபோன்று, வேலை வாங்கித் தருவதாகக் கூறும் நபர்களை நம்ப வேண்டாம். யாராவது அதுபோன்று வேலை வாங்கித் தருவதாகக் கூறினால் தகவல் தெரிவிக்கலாம். முறைகேடுகள் இல்லாமல் நேர்மையாக தேர்வு நடத்தப்படும் என்றார்.
 டி.எஸ்.பி. வெள்ளைச்சாமி, காவல் ஆய்வாளர் விஜயக்குமார், உதவி ஆய்வாளர் கிள்ளிவளவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com