விழுப்புரம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இருவர் கைது

விழுப்புரம், திண்டிவனம் பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டதாக சென்னையைச் சேர்ந்த ரௌடி உள்பட 2 பேரை போலீஸார்

விழுப்புரம், திண்டிவனம் பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டதாக சென்னையைச் சேர்ந்த ரௌடி உள்பட 2 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 43 பவுன் நகைகள், இரு சக்கர வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
 விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் புதன்கிழமை மாலை செய்தியாளர்களிடம் கூறியாதாவது:
 விழுப்புரம், திண்டிவனம் பகுதியில் தொடர் வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகளைப் பிடிக்க டிஎஸ்பி சங்கர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
 கடந்த வாரம் விழுப்புரம் திருச்சி சாலையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரி பின்புறம் உள்ள சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் ஐந்தரை பவுன் தங்கச்சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து விட்டு, தனது கூட்டாளியின் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றதாக புகார் வந்தது. இதையடுத்து, அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தினோம். அவர்கள் சென்னை ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த தினேஷ்குமார் (27), விழுப்புரம் அருகேயுள்ள சாலையாம்பாளையத்தைச் சேர்ந்த செல்வகணபதி(23) என்பது தெரிய வந்தது. அவர்கள் இருவரும், விழுப்புரம் பாணாம்பட்டு லட்சுமி நகரில் பதுங்கியிருப்பது தெரிந்து புதன்கிழமை காலை கைது செய்தோம்.
 தினேஷ்குமார் மீது சென்னை, காஞ்சிபுரம் பகுதிகளில் 3 கொலை வழக்குகள் உள்பட 12 வழக்குகள் உள்ளன. 4 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர். இவர் வளவனூர் பகுதியில் தங்கியிருந்து, விழுப்புரம் மாவட்டத்தில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவருடன் செல்வகணபதியும் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
 அவர்களிடமிருந்து 43 பவுன் தங்கச் சங்கிலிகள், இரு சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
 விழுப்புரம் மாவட்டத்தில் குற்றங்கள் தொடர்பாக 24 மணி நேரமும் புகார் தெரிவிக்க "ஹலோ போலீஸார்' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 9655440092 என்ற இலவச செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். கட்செவி அஞ்சல் மூலமாகவும் புகார்களை தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்கள் குறித்த விவரம் ரகசியமாக வைக்கப்படும்.
 இந்த செல்லிடப்பேசிக்கு கட்செவி அஞ்சல் மூலம் படங்கள், விடியோக்களும் அனுப்பலாம் என்றார் எஸ்.பி.
 பேட்டியின் போது, விழுப்புரம் டி.எஸ்.பி. சங்கர், தாலுகா காவல் ஆய்வாளர் ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com