மாட்டு வண்டிகள் மூலமான  மணல் திருட்டை தடுக்க உரிமம் வழங்கக் கோரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் மாட்டு வண்டிகளில் தொடரும் மணல் திருட்டை தடுக்க, மணல் எடுப்பதற்கான உரிமம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் மாட்டு வண்டிகளில் தொடரும் மணல் திருட்டை தடுக்க, மணல் எடுப்பதற்கான உரிமம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், தென்பெண்ணையாற்றில் விதிகளை மீறி நீண்ட காலமாக இயங்கி வந்த மணல் குவாரிகள் மூடப்பட்டு அண்மையில் திருக்கோவிலூர் கீழக்கோண்டூரில் அரசு சார்பில் புதிய மணல் குவாரி தொடங்கி செயல்பட்டு வருகிறது.
சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து மணல் எடுக்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் வந்து குவிவதால் மணல் வழங்க முடியாத நெருக்கடி நிலையும் உள்ளது.
இதனால், சென்னை உள்ளிட்டப் பகுதிகளில் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு, ஒரு லாரி லோடு ரூ.40 ஆயிரம் வரை விலை உயர்ந்துள்ளது.
இதனைப் பயன்படுத்திக் கொண்ட லாரி உரிமையாளர்கள், விழுப்புரம் பகுதியில் ஏற்கெனவே மணல் சுரண்டப்பட்டு மூடப்பட்ட ஆற்றுப் பகுதியில் மாட்டு வண்டிகள் மூலம் மணலை எடுத்து வந்து கிராமப்புறங்களில் கொட்டி வைத்து விற்பனை செய்து வருவது தொடர்கிறது.
இதுகுறித்து புகார்கள் எழுந்ததால், மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாட்டு வண்டிகளில் தொடரும் மணல் திருட்டு: இதனிடையே, லாரிகளுக்கு ஈடாக மாட்டு வண்டிகளிலும் மணல் திருட்டு நீண்ட காலமாக உள்ளது.
விழுப்புரம் அருகே குச்சிப்பாளையம், மரகதபுரம், பிடாகம், சித்தாத்தூர், வளவனூர் அருகே கல்லிப்பட்டு, ஏ.கே.குச்சிப்பாளையம், சொர்ணாவூர் உள்ளிட்ட பல இடங்களில் 500-க்கும் மேற்பட்ட வண்டிகளில் சிறுக, சிறுக ஆற்று மணலை எடுத்து வருகின்றனர்.ஒரு வண்டி மணல் ரூ.400 முதல் ரூ.1,000 வரை விற்பதால், தற்போது விவசாயிகள் மட்டுமன்றி பல்வேறு தரப்பினர் புதிய மாட்டு வண்டிகளுடன் ஆற்றில் களமிறங்கியுள்ளனர்.
இந்நிலை அதிரித்ததால், அவ்வப்போது போலீஸாரும், வருவாய்த் துறையினரும் பிடித்து பரிதாபம் பார்த்து, ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதித்து அனுப்புவதும், மீண்டும் அவர்கள் மணல் திருடுவதும் தொடர்கிறது. இதனை முறைப்படுத்த வேண்டும் என்ற புகாரும் எழுந்துள்ளது.
இதுகுறித்து மாட்டு வண்டித் தொழிலாளர்களிடம் கேட்டபோது, தினசரி பிழைப்பிற்காக சிறிதளவே மணல் ஏற்றிச் சென்று விற்கிறோம்.
லாரிகளுக்கு குவாரியில் அனுமதிப்பதைப் போல், எங்களுக்கும் பணம் செலுத்தி மணல் எடுக்க உரிமம் வழங்க வேண்டும். அப்படி இல்லாததால், ஆற்றில் மணல் எடுத்துச் செல்கிறோம். முந்தைய காலத்தில் வழங்கியதைப் போல், பொதுப்பணித் துறை மூலம் மணல் எடுக்க உரிமம் வழங்க அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்றனர்.
இதுகுறித்து, கனிமவள அதிகாரிகளிடம் கேட்டபோது, மாட்டு வண்டிகளுக்கு ஏற்கெனவே பரவலாக அனுமதியளித்து, பொதுப்பணித் துறை மூலம் மணல்  வழங்கப்பட்டது. பல இடங்களில் மணல் அள்ளப்பட்டுவிட்டதால் அது கைவிடப்பட்டது.
மீண்டும் அனுமதி வழங்குவது குறித்து, அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com