உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சியில் கூடுதல் நீதிமன்றங்கள் திறப்பு

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் சார்பு நீதிமன்றத்தையும், கள்ளக்குறிச்சியில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தையும்

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் சார்பு நீதிமன்றத்தையும், கள்ளக்குறிச்சியில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தையும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தார்.
 உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி சார்பு நீதிமன்றத்தைத் திறந்துவைத்தார்.
 நிகழ்ச்சியில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:
 தமிழகத்தில் நீதித் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் அரசுக் கட்டடங்களில் இயங்கி வருகின்றன.
 உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. மேலும், அனைத்து வட்டங்களிலும் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களை ஏற்படுத்த தமிழக அரசால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நூட்டி ராமமோகன் ராவ் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
 முன்னதாக, மாவட்ட முதன்மை நீதிபதி பி.சரோஜினி தேவி வரவேற்றார்.
 கள்ளக்குறிச்சி தொகுதி மக்களவை உறுப்பினர் க.காமராஜ், சட்டப்பேரவை உறுப்பினர்கள் இரா.குமரகுரு (உளுந்தூர்பேட்டை), அ.பிரபு (கள்ளக்குறிச்சி), தமிழக கூட்டுறவு சர்க்கரை இணையத் தலைவர் கே.ஜி.பி.ஞானமூர்த்தி, உளுந்தூர்பேட்டை வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் என்.சந்திரசேகர், செயலர் பி.ஆர்.வெங்கடேசன், கள்ளக்குறிச்சி வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் டி.சின்னத்தம்பி, செயலாளர் ஏ.பழனிவேல், பொருளாளர் சு.ராஜேஸ்வரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். விழுப்புரம் நீதிமன்ற நடுவர் என்.அருணாசலம் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com