விழுப்புரம் தாற்காலிக பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையம்

விழுப்புரம் தாற்காலிக பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக புறக்காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

விழுப்புரம் தாற்காலிக பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக புறக்காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. விழுப்புரம் நகர காவல் நிலையத்துக்குச் சென்று புகார் தெரிவிப்பதற்குப் பதிலாக அங்கேயே புகாரை பதிவு செய்யலாம் என மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் தெரிவித்தார்.
 விழுப்புரம் ரயில்வே மேம்பால சீரமைப்புப் பணி காரணமாக கிழக்கு பாண்டி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், கனரக வாகனங்கள், கோலியினூரிலிருந்து சென்னை-கும்பகோணம் சாலையில் சென்று திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக விழுப்புரம் நகருக்கு வர வேண்டியுளது. இதனால், 25 கி.மீ.க்கு மேல் சுற்றி வர வேண்டியுள்ளதால், விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் மாதா கோயில் அருகே தாற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. அங்கிருந்து, கடலூர், பண்ருட்டி, புதுச்சேரி ஆகிய ஊர்களுக்கும் மற்றும் பல்வேறு கிராமங்களுக்கும் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
 ஆனால், தாற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ள பகுதி நகர காவல் நிலைய எல்லைக்கு உள்பட்டதாகும். எதிரிலேயே, தாலுகா காவல் நிலையம் இருந்தாலும் அங்கு பாதுகாப்பு வசதிகளை செய்ய வேண்டியுள்ளது நகர போலீஸின் பணியாகும். மேலும், பயணிகளும் புகார் தெரிவிக்க நகர காவல் நிலையத்துக்குச் செல்ல வேண்டும்.
 ஆகையால், தாற்காலிக பேருந்து நிலையத்தில், புதிய பேருந்து நிலையத்தில் இருப்பது போல புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவின் பேரில் அங்கு புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது.
 இதுகுறித்து எஸ்.பி.ஜெயக்குமார் கூறியதாவது: தாற்காலிக பேருந்து நிலையத்துக்கு பல்வேறு ஊர்களில் இருந்து வரும் பயணிகள், பேருந்துக்காக வெகுநேரம் காத்திருக்கவேண்டி இருக்கும். அப்போது அவர்களுக்கு இடையூறுகள், அசம்பாவிதங்கள் ஏற்ப்பட்டால் உடனடியாக போலீஸாரை தொடர்புகொள்ளும் வகையில் இந்த புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
 இங்கு 24 மணி நேரமும் ஒரு உதவி ஆய்வாளர் அல்லது சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் ஒரு காவலர் பணியில் இருப்பர். அவர்களிடம் பயணிகள் தங்களது புகார்களை தெரிவிக்கலாம். மேலும், உதவிக்கு அங்குள்ள போலீஸாரை அணுகலாம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com