ஆட்சியர் அலுவலகம் முன் குடும்பத்துடன் விவசாயி தீக்குளிக்க முயற்சி

செஞ்சி அருகே நிலத்தை குத்தகைக்கு விட்டு ரூ.15 லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, விவசாயி தனது குடும்பத்தினருடன்

செஞ்சி அருகே நிலத்தை குத்தகைக்கு விட்டு ரூ.15 லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, விவசாயி தனது குடும்பத்தினருடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
 செஞ்சி அருகேயுள்ள முட்டத்தூரைச் சேர்ந்தவர் மண்ணாங்கட்டி (60), விவசாயி. இவர், தனது மனைவி ஆனந்தாயி (55), மகன் சிவா (38) ஆகியோருடன் திங்கள்கிழமை காலை விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் வந்து, திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அவர்களை அங்கிருந்த தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் ராஜன் மற்றும் போலீஸார் தடுத்து விசாரித்தனர்.
 அவர்களிடம் விவசாயி கூறியதாவது: செஞ்சியில் உள்ள மருத்துவர் சூரியபிரகாஷ், எனது மகன் சிவாவுடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக, மாத்தூரில் உள்ள தனக்குச் சொந்தமான 35 ஏக்கர் நிலத்தை குத்தகைக்குப் பயிரிடுமாறு தெரிவித்தார்.
 இதனையேற்று, ரூ.50 ஆயிரம் முதல் தவணையை மருத்துவரிடம் கொடுத்துவிட்டு, ரூ.1 லட்சம் செலவு செய்து கல்லும், முள்ளுமாக இருந்த நிலத்தை இயந்திரம் மூலம் சீர்படுத்தி பயிரிட்டோம். இரண்டாம் ஆண்டு 2016-ல் ரூ.2 லட்சம் குத்தகைப் பணம் கொடுத்தோம்.
 இதற்காக பாண்டு பேப்பரில் கையெழுத்து வாங்கிக் கொண்டு அதனை மருத்துவரே வைத்துக் கொண்டார்.
 இடையே, ரூ.3 லட்சம் செலவிட்டு குழாய் பதித்து பயிரைப் பார்த்து வந்தோம். நிலம் சீரமைக்கப்பட்டு பயிரிடுவதை அறிந்த மருத்துவர், மோசடி செய்யும் நோக்கில் அவரது அடியாள்களை அனுப்பி, எங்களை வெளியேற்றி விட்டார். கரும்பு, உளுந்துப் பயிர்களையும் அறுவடை செய்து எடுத்துக் கொண்டார்.
 பயிர், செலவினத் தொகை ரூ.15 லட்சத்தை மோசடி செய்த மருத்துவர் குறித்து, காவல் நிலையம், விழுப்புரம் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்றார்.
 நிலப் பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது என்று போலீஸார் அவர்களுக்கு அறிவுறுத்தினர். இதனையடுத்து, ஆட்சியர் அலுவலகத்தில் அவர்கள் மனு அளித்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com