மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் அவலம் தடுக்கப்பட வேண்டும்

மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் அவலத்தைத் தடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் இரா.நல்லகண்ணு வலியுறுத்தினார்.

மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் அவலத்தைத் தடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் இரா.நல்லகண்ணு வலியுறுத்தினார்.
தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் வடக்கு மண்டலக் கூட்டம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்ட அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற இயக்கத்தின் மாநிலத் தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினருமான இரா.நல்லகண்ணு செய்தியாளர்களிடம் கூறியது: நாட்டில் பெருகி வரும் சாதிய ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டத்தை இயற்ற வேண்டும். இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மீது தொடரும் தாக்குதல்களை தடுக்கவும், அதனால் நிகழும் படுகொலைகள் மீது நீதி விசாரணை நடத்தவும் வேண்டும். இது தொடர்பாக, மே 27, 28-இல் மாணவர்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும்.
அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இத்தகைய ஆணவக் கொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. உத்தரப்பிரதேச மாநிலத்துக்குப் பிறகு தற்போது தமிழகத்தில் இந்த நிலை அதிகரித்துள்ளது.
மத்திய, மாநில அரசு நிதிநிலை அறிக்கையில், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் தொகைக்கு ஏற்ப உரிய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். தேசிய ஊரக வேலைத் திட்டத்தை 150 நாள்களாக உயர்த்த வேண்டும். இந்தத் திட்டத்தில், முழுமையான வேலையும் வழங்காத, உரிய கூலியும் வழங்காத நிலை உள்ளது. கடலூர் மாவட்டத்தில் கழிவு அகற்றும் துப்புரவுத் தொழிலாளிகள் 3 பேர் விஷவாயு தாக்கி இறந்துள்ளனர். மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் அவலத்தைப் போக்க வேண்டும். இதற்கான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தாமல் உள்ளனர்.
தாட்கோ திட்டத்தில் கடன்பெறும் பயனாளிகளிடம் உத்தரவாதம் கேட்கும் வங்கி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உளுந்தூர்பேட்டை பால் உற்பத்தி தொழிற்சாலை தொழிலாளர்கள் 94 பேர் பணி நீக்கத்தை திரும்பப் பெற வேண்டும் என்றார்.
ரஜினியின் முடிவுக்கு வரவேற்பு: தொடர்ந்து, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்து கூறியதாவது: ரஜினி இலங்கைப் பயணத்தை ரத்து செய்துள்ளது வரவேற்கத்தக்கது. கட்சி தொடர்பாக, தா.பாண்டியன் விமர்சித்ததாகப் பேசப்படுவது, வெறும் வதந்தி என்றார் இரா.நல்லகண்ணு.
முன்னதாக நடைபெற்றக் கூட்டத்தில், இயக்கத்தின் மாநிலச் செயலர் மு.வீரபாண்டியன், பொருளர் லிங்கம், மாவட்டச் செயலர் ஏ.வி.சரவணன், கோவிந்தராஜன், குமார், சுப்பிரமணி, பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com