வங்கிக் கணக்குகளை குறிவைக்கும் மோசடி கும்பல்: இணைய பரிவர்த்தனையை பயன்படுத்தி பணம் சுருட்டல்

வங்கிக் கணக்கிலிருந்து நூதன முறையில் பணம் மோசடி நடைபெறுவது அதிகரித்து வருகிறது.

வங்கிக் கணக்கிலிருந்து நூதன முறையில் பணம் மோசடி நடைபெறுவது அதிகரித்து வருகிறது. வங்கி அதிகாரிகள் போலப் பேசி, இணைய பரிவர்த்தனை மூலம் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிலிருந்து லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்யப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் மஞ்சபுத்தூரைச் சேர்ந்தவர் பசுபதி. மெக்கானிக். இவர் அங்குள்ள தனியார் வங்கியில், கணக்குத் தொடங்கி ரூ.1.35 லட்சம் அளவில் சேமித்து வைத்திருந்தார்.
கடந்த 5.1.15 அன்று வங்கி ஏடிஎம் மையத்துக்குச் சென்று ரூ.1,100 பணம் எடுத்தார். அதன் பிறகு, மறுநாள் 6-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை தொடர்ந்து, அவரது கணக்கிலிருந்து ரூ.1.34 லட்சம் பணம் எடுக்கப்பட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து அவர் வங்கியில் புகார் தெரிவித்தார். இணையவழி பரிவர்த்தனை மூலம் அவரது வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து, வங்கியிலும், காவல் துறையிலும் புகார் கொடுத்தும் நீண்டகாலமாக நடவடிக்கை எடுக்காததால், அண்மையில் அவர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தார்.
இதேபோல, திருவெண்ணெய்நல்லூர் சேமங்கலத்தைச் சேர்ந்த செல்வக்குமாரை அண்மையில் செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஏடிஎம் அட்டையைப் புதுப்பிக்குமாறு தெரிவித்தார். மேலும், அவரிடம் வங்கி அதிகாரி போலப் பேசி, வங்கிக் கணக்கு எண், ஏடிஎம் அட்டை எண், ரகசியக் குறியீட்டு எண் உள்ளிட்டவற்றை கேட்டறிந்து ரூ.43,500 பணத்தை வங்கிக் கணக்கிலிருந்து மர்ம நபர் அபகரித்தார்.
வானூர், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து, வங்கிக் கணக்கு எண், ஏடிஎம் அட்டை ரகசியக் குறியீட்டு எண்களைக் கேட்டு பணத்தை நூதன முறையில் திருடுவது தொடர்கிறது.
விழுப்புரம் மாவட்டத்தில், இணையவழி பணப்பரிவர்த்தனை மூலமாக வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டதாகவும், ஏடிஎம் ரகசிய எண்களைக் கேட்டு, லட்சக்கணக்கில் திருட்டு போனதாகவும், கடந்தாண்டில் 100-க்கும் மேற்பட்ட புகார்கள் கொடுக்கப்பட்டு, வழக்குப் பதியப்பட்டு விசாரணையில் உள்ளது.
இதுகுறித்து மாவட்ட குற்றப் பிரிவு ஏடிஎஸ்பி கோமதி கூறியதாவது:
மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் 37 புகார்கள் வரை கொடுக்கப்பட்டுள்ளன. சிலரிடம், உங்கள் செல்லிடப்பேசி எண்ணுக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பரிசு விழுந்துள்ளதாகத் தெரிவித்து, அதற்கு முன்பணமாக ரூ.10 லட்சம், ரூ.50 லட்சம் செலுத்துமாறு கூறி பணத்தை திருடியுள்ளனர்.
சிலர் வெளிநாட்டில், வெளி மாநிலங்களில் வேலை வாங்கித் தருவதற்காகவும் செல்லிடப்பேசியில் கூறி, இணையவழி மூலமாக பணப்பரிவர்த்தனை செய்து மோசடி செய்துள்ளனர்.
உங்களது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும், ஏடிஎம் அட்டையைப் புதுப்பிக்க வேண்டும் என்றும், வங்கி தலைமையகத்திலிருந்து பேசுவதாகக் கூறி, வாடிக்கையாளர்களின் அறியாமையைப் பயன்படுத்தி, வங்கிக் கணக்கு எண், ஏடிஎம் ரகசியக் குறியீட்டு எண்களைப் கேட்டுப் பெற்று, போலி ஏடிஎம் அட்டைகளைத் தயாரித்து, திருடும் கும்பலும் அதிகரித்துள்ளது.
வங்கி வாடிக்கையாளர்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததாலும், இணையவழி வங்கிப் பரிவர்த்தனை தொடர்பாக பாதுகாப்பற்ற நிலை உள்ளதாலும் இதுபோன்ற மோசடிகள் தொடர்ந்து வருகின்றன.
வங்கி அதிகாரிகள், ஒருபோதும் வங்கிக் கணக்கு மாற்றம் தொடர்பாக செல்லிடபேசியில் அழைத்துப் பேசுவதில்லை என்று, வங்கி நிர்வாகங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தற்போது, குறுஞ்செய்தி அனுப்புவது மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு முழுமையான விழிப்புணர்வை ஏற்படுத்தாது.
ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதற்கு மற்றவர்கள் உதவியை எதிர்பார்க்கக் கூடாது. ரகசியக் குறியீட்டு எண்ணைப் பதிவு செய்யும் போது, வெளியே தெரியாத வகையில் ஏடிஎம் இயந்திரத்தை மறைத்தபடி குனிந்து பயன்படுத்த வேண்டும்.
வங்கிக் கணக்கு எண், ஏடிஎம் ரகசியக் குறியீட்டு எண் போன்றவற்றை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்பதை விளக்க வேண்டும்.
இணையவழி பணப்பரிவர்த்தனையில் ஒரு முறை ரகசிய குறியீட்டு (ஒன்-டைம் பாஸ்வர்டு) எண்ணைப் பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை நடைபெறுவதால் பல திருட்டுகள் நடைபெறுகின்றன.
இதைத் தடுக்க, பெருந்தொகையை பரிவர்த்தனை செய்யும் போது, ரகசியக் குறியீட்டு எண்ணை மட்டுமே பார்க்காமல், உரிய வாடிக்கையாளர்களை வங்கி நிர்வாகம் தொடர்புகொண்டு கேட்டு பிறகு அனுப்ப வேண்டும்.
இதுபோன்ற புகார்களின் போது குறிப்பிடப்படும் குற்றவாளிகளின் செல்லிடப்பேசி எண்களை விசாரித்தால், போலியான முகவரி கொடுத்து வாங்கிய எண்களாக உள்ளன.
ஆதார் எண் போன்ற விவரங்கள் இல்லாத செல்லிடப்பேசி இணைப்புகள் வழங்குவது இப்போதும் தொடர்வதால், இதுபோன்ற நூதன மோசடி நபர்கள் பெருகி வருகின்றனர்.
வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்து இணையவழி திருட்டுச் சம்பவங்கள் நடைபெறுவதால் விசாரணைக் காலமும் நீண்டு கொண்டே போகிறது. சில வங்கி அதிகாரிகளும் விசாரணைக்கு ஒத்துழைப்பதில்லை.
இதனால், காவல் துறையினரால் மட்டுமே இந்தத் தொழில்நுட்பத் திருட்டுகளை முற்றிலும் தடுக்க முடியாது. வங்கி நிர்வாகமும், வாடிக்கையாளர்களும் விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே இதைத் தடுக்க முடியும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com