வங்கிக் கணக்கிலிருந்து நூதனத் திருட்டு: விழிப்புணர்வு குறும்படங்களை வெளியிடுகிறது காவல் துறை

வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிலிருந்து நூதன முறையில் பணத்தைத் திருடும் கும்பலிடம் சிக்கி பொதுமக்கள் ஏமாறாமல் இருக்கும்
வங்கிக் கணக்கிலிருந்து நூதனத் திருட்டு: விழிப்புணர்வு குறும்படங்களை வெளியிடுகிறது காவல் துறை

வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிலிருந்து நூதன முறையில் பணத்தைத் திருடும் கும்பலிடம் சிக்கி பொதுமக்கள் ஏமாறாமல் இருக்கும் பொருட்டு, 3 விழிப்புணர்வு குறும் படங்களை விழுப்புரம் காவல் துறை தயாரித்துள்ளது. இந்த குறும்படங்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளன.

வங்கி மேலாளர் பேசுவதாகக் கூறி வாடிக்கையாளரின் ரகசிய எண்களை பெற்று கணக்கில் இருந்து பணத்தை திருடுவது, ஏடிஎம் அட்டைகளை போலியாக தயாரித்து பணத்தை திருடுவது, ஏடிஎம் மையங்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி ஏடிஎம் அட்டை விவரங்களை திருடி அதன் மூலம் கணக்கிலிருந்து பணத்தைத் திருடுவது, ஏடிஎம் அட்டையை வேறு நபரிடம் கொடுத்து பணம் எடுக்கச் சொல்லும்போது, அட்டையை மாற்றி கொடுத்துவிட்டு, பின்னர் பணத்தை திருடிச் செல்வது போன்ற பல்வேறு குற்றச் சம்பவங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் நிகழ்ந்து வருகின்றன. நன்கு விவரம் அறிந்தவர்கள்கூட இத்தகைய திருட்டுக் கும்பலிடம் சிக்கிக் கொள்கின்றனர். இதுதொடர்பாக, மாவட்ட குற்றப் பிரிவுக்கு நாள்தோறும் ஏராளமான புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.

திருட்டுக் கும்பல் தொடர்பு கொண்ட செல்லிடப்பேசி எண்கள் போலியானவையாக இருப்பதால், திருட்டில் ஈடுபடுவர்கள் யார் என்பதை கண்டறிவதில் சிக்கல் நீடிப்பதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். ஆகவே, ஏமாறாமல் இருப்பதே சிறந்தது என்கின்றனர் காவல் துறையினர்.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட காவல் துறை, வங்கி வாடிக்கையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடும் கும்பல் கையாளும் வழிமுறைகளை விளக்கும் வகையில் விழிப்புணர்வு குறும் படங்களை தயாரிக்க மாவட்ட குற்றப்பிரிவு முடிவு செய்தது.

அதன்படி, வங்கி ஏடிஎம் அட்டையை மற்றொரு நபரிடம் கொடுத்து பணம் எடுக்கச் செல்லும்போது எப்படி ஏமாற்றப்படுகிறோம், வங்கி மேலாளர் பேசுவதுபோல பேசி வங்கி ரகசிய எண்ணை எப்படி திருட்டுக் கும்பல் பெறுகிறது, திருட்டுக் கும்பல் அழைக்கும்போது எப்படி சுதாரித்துக் கொள்வது என 3 குறும் படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

சுமார் 5 நிமிடங்கள் வரை ஓடக்கூடிய இந்தப் படங்கள் வெளியிடப்படுவதற்கான தேதியை முடிவு செய்ய காவல் கண்காணிப்பாளரின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது, காவல் துறை தேர்வு நடைபெற்று முடிந்தவுடன் குறும் படங்கள் வெளியிடப்படும் என்றார் அவர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com