அரசு குவாரியில் மணல் வழங்குவதில் தாமதம்: லாரி உரிமையாளர்கள் புகார்

விழுப்புரம் மாவட்ட அரசு மணல் குவாரியில், மணல் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக, மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை புகார் மனு அளித்தனர்.

விழுப்புரம் மாவட்ட அரசு மணல் குவாரியில், மணல் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக, மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை புகார் மனு அளித்தனர்.
 இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.யுவராஜ் தலைமையில் லாரி உரிமையாளர்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து புகார் மனு வழங்கி கூறியதாவது:
 தமிழக அரசே மணல் விற்பனையை ஏற்று நடத்துவதை வரவேற்கிறோம். தற்போது, சென்னை உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளுக்கான அரசு மணல் குவாரி விழுப்புரம் மாவட்டத்தில் தான் இயங்குகிறது.
 கடந்த மே 9-ஆம் தேதி முதல் குவாரியில் மணலைப் பெறுவதற்கு, லாரி ஒன்றுக்கு நிர்ணயிக்கப்பட்ட ரூ.1,050 வங்கி வரைவோலையைப் பெற்று அனுப்பி வருகிறோம். ஆனால், உரிய முறையில் மணல் வழங்காமல் லாரிகள் காத்திருக்கும் நிலை தொடர்கிறது.
 உள்ளூர் பிரமுகர்கள் தங்களது லாரிகளை குறுக்கு வழியில் எடுத்துச் சென்று மணல் ஏற்றிச் செல்வதால், சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட வெளியூர்களிலிருந்து வரும் ஆயிரக்கணக்கான லாரிகள் காத்திருக்க வேண்டியுள்ளது. கடந்த 8 நாள்களாக இதே நிலைதான். அங்கு காத்திருக்கும் லாரி ஓட்டுநர்கள் குடிநீர், உணவு கிடைக்க வழியின்றி தவிக்கின்றனர்.
 உள்ளூர் லாரிகள் ஆக்கிரமிப்பு, நிறுத்துமிடம், கோயில் வசூல் என பலர் ரூ.500 முதல் ஆயிரம் வரை மிரட்டிப் பறிக்கின்றனர். இதனால், கூடுதல் தொகை செலவாவதுடன், உரிய மணல் கிடைக்காமல் நீண்ட நாள் காத்திருக்கின்றனர்.
 அரசு மணல் குவாரியில் கூடுதல் பொதுப் பணித் துறை ஊழியர்களை நியமித்தும், வரிசையில் அனுப்ப உரிய போலீஸ் பாதுகாப்பும், பணம் பறிப்பதைத் தடுத்து, பாகுபாடின்றி மணல் ஏற்றுவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.
 இதுகுறித்து நடவடிக்கை இல்லையெனில், அரசை வலியுறுத்தி, சென்னை கோட்டை நோக்கி பேரணியாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com