ஆதார் எண் வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டுமே மானிய உரம்: ஜூன் 1-இல் தொடக்கம்

தமிழக விவசாயிகள் உரங்களை மானிய விலையில் பெறும் புதிய திட்டம் ஜூன் 1 முதல் அறிமுகமாகிறது. இதற்கு ஆதார், விரல் ரேகைப் பதிவு அவசியமாக்கப்பட்டுள்ளது.

தமிழக விவசாயிகள் உரங்களை மானிய விலையில் பெறும் புதிய திட்டம் ஜூன் 1 முதல் அறிமுகமாகிறது. இதற்கு ஆதார், விரல் ரேகைப் பதிவு அவசியமாக்கப்பட்டுள்ளது.
 விவசாயத்துக்கு நாடு முழுவதும் பயன்படும் உரங்களுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.74 ஆயிரம் கோடியை மத்திய அரசு மானியமாக வழங்கி வருகிறது. இந்த மானியத் தொகையை, உர நிறுவனங்களுக்கே மத்திய அரசு நேரடியாக வழங்கி வந்தது.
 இந்த நிலையில் விவசாயிகளுக்கான உர மான்யம் விவசாயிகளை மட்டுமே சென்றடைய வேண்டும் என்பதற்காகவும், உரங்கள் பிற பயன்பாட்டிற்கு கடத்தப்படுவதை தடுக்கும் விதமாகவும் வருகிற ஜூன் 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் நேரடி உர மானிய முறையை மத்திய அரசு அமல்படுத்தப்பட உள்ளது.
 தமிழகத்திலும் இந்த நேரடி உர மானிய முறையை அமல்படுத்துவதற்கு வேளாண்மைத் துறையின் உரக்கட்டுப்பாட்டு பிரிவினர் தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
 அதன்படி, வருகிற ஜூன் 1 முதல் அனைத்து பகுதிகளிலும் உள்ள தனியார் உர விற்பனையாளர்கள் மற்றும் வேளாண் கூட்டுறவு வங்கிகளில், விவசாயிகள் ஆதார் எண்ணை அளித்து, விரல் ரேகையை பதிவு செய்தால் மட்டுமே அவர்களுக்கு மானிய விலையில் உரம் வழங்கப்படும்.
 இதற்காக பயோ மெட்ரிக் அடிப்படையில் விவசாயிகளின் ஆதார் விவரங்கள் அடங்கிய கையடக்க மின்னணுக் கருவிகள் (பிஓஎஸ்) உர விற்பனையாளர்கள், வேளாண் கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கப்பட உள்ளன.ரூ.27 ஆயிரத்து 500 மதிப்புள்ள இந்தக் கருவியை, உர நிறுவனங்கள் உர விற்பனையாளர்களுக்கு இலவசமாக வழங்கும். விவசாயிகள் உரம் வாங்க செல்லும்பொது அவரது ஆதார் எண் இந்த கருவியில் பதிவு செய்யப்பட்டு, விரல் ரேகையும் பதிவு செய்தால் மட்டுமே அவருக்கு மானிய விலையில் உரம் வழங்கப்படும். மானியம் போக மீதி தொகையை விவசாயி அளித்தால் மட்டும் போதுமானது.
 அவருக்கான மானியத் தொகை உர நிறுவனத்தின் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த கருவி உள்ள சில்லறை உர விற்பனையாளர்கள் மட்டுமே உர விநியோகம் செய்ய இயலும். இதனால், மானியம் விரயமாவது தடுக்கப்படும்.
 இந்த புதிய திட்டம் குறித்து தற்போது உர விற்பனையாளர்களுக்கும், கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கும் பரவலாக பயிற்சி அளிக்கப்படுகிறது.
 இது தொடர்பாக, விழுப்புரம் மாவட்டத்தில், வேளாண்மைத் துறை மற்றும் தனியார் உர நிறுவனம் சார்பில், விழுப்புரம் வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்தில் வேளாண் அலுவலர்களுக்கும், உர விற்பனையாளர்களுக்கும் பயிற்சிக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
 வேளாண்மை இணை இயக்குநர் தி.கார்த்திகேயன், வேளாண்மை துணை இயக்குநர் அரிகிருஷ்ணன், உதவி இயக்குநர் தாமோதரன் முன்னிலை வகித்தனர். தனியார் உர நிறுவன மேலாளர்கள் ராஜ்குமார், ஜனகரத்தினம், கோபால் உள்ளிட்டோர் விளக்கிப் பேசினர். மின்னணு இயந்திரம் தொடர்பான விளக்க கையேடுகளும் வழங்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com