காவலர் தேர்வுக்கு கூடுதல் பேருந்து வசதி: எஸ்.பி. தகவல்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் ஆகிய ஊர்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள காவலர் தேர்வை எழுத வரும் தேர்வர்களின்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் ஆகிய ஊர்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள காவலர் தேர்வை எழுத வரும் தேர்வர்களின் வசதிக்காக, கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் தெரிவித்தார்.
 தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் மூலம் இரண்டாம் நிலைக் காவல், இரண்டாம் நிலை சிறைக் காவலர், தீயணைப்பு படை வீரர் ஆகிய பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான தேர்வு வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இத்தேர்வை 31, 926 பேர் எழுத உள்ளனர்.
 இதற்காக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 10 மணிக்குத் தொடங்கி முற்பகல் 11.20 வரை தேர்வு நடைபெற உள்ளது.தேர்வு மையங்களில், பணியாற்ற உள்ள தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள், அறை கண்காணிப்பாளர்கள், அறை பிரிவு அலுவலர்களுக்கான பயிற்சிகள் அந்தந்த மையங்களில் வியாழக்கிழமை அளிக்கப்பட்டன.
 விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் பங்கேற்று எஸ்.பி. ஜெயக்குமார் பேசுகையில், தேர்வை நடத்தும் போலீஸார் தேர்வு நாளன்று காலை 7 மணிக்கே தேர்வு மையத்துக்கு வந்துவிட வேண்டும், தேர்வின்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.
 இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: காவலர் தேர்வுக்கு வரும் தேர்வர்கள், அறை நுழைவுச்சீட்டு, பேனா, பரீட்சை அட்டை தவிர வேறு எதையும் அறைக்குள் எடுத்து வரக்கூடாது. தேர்வு நடைபெறும் மையங்களில் சில இடங்களில் இருக்கை மட்டும் போடப்படும் என்பதால், பரீட்சை அட்டை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.
 தேர்வுக்கூடப் பகுதியில் குடிநீர் வசதி, கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்படும். தேர்வில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பங்கேற்க இருப்பதால், தேர்வு மையங்களுக்கு அந்த நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்படும். இது குறித்து மாவட்ட நிர்வாகம் மூலமாக, அரசுப் போக்குவரத்துக் கழகத்துடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com