ஏடிஎம் மையங்களில் உதவுவது போல நடித்து ரூ.4.97 லட்சம் திருட்டு: தில்லியைச் சேர்ந்த இருவர் கைது

கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் பகுதி ஏடிஎம் மையங்களில் முதியவர்களுக்கு உதவுவதுபோல நடித்து, ஏடிஎம் அட்டையை மாற்றிக் கொடுத்து, ரூ.4.97 லட்சத்தை வங்கிக் கணக்கிலிருந்து திருடிய

கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் பகுதி ஏடிஎம் மையங்களில் முதியவர்களுக்கு உதவுவதுபோல நடித்து, ஏடிஎம் அட்டையை மாற்றிக் கொடுத்து, ரூ.4.97 லட்சத்தை வங்கிக் கணக்கிலிருந்து திருடிய தில்லியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து ரூ.1.18 லட்சம் ரொக்கம், 57 போலி ஏடிஎம் அட்டைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள ஏடிஎம் மையத்தில் கள்ளக்குறிச்சியை அடுத்த அகரகோட்டாலத்தைச் சேர்ந்த தங்கவேல் மனைவி சிவகாமி கடந்த 17 ஆம் தேதி பணம் எடுக்கச் சென்றார். அங்கு அந்தப் பெண்ணுக்கு உதவுவது போல ஓர் இளைஞர் நடித்து, பணம் வரவில்லை எனக் கூறி அவரது ஏ.டி.எம். அட்டைக்கு பதிலாக வேறு அட்டையைக் கொடுத்தார். சிறிது நேரத்தில் சிவகாமியின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.10 ஆயிரம் எடுக்கப்பட்டதாக அவரது செல்லிடப் பேசிக்கு குறுந்தகவல் வந்தது.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவரிடமும் இதே போல ஏமாற்றி, வங்கிக்கணக்கிலிருந்து ரூ.18ஆயிரம் எடுக்கப்பட்டது.
தியாகதுருகம் புக்குளம் சாலையில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்கச் சென்ற சங்கராபுரம் அருகே கீழ்பாடியைச் சேர்ந்த மாயக்கண்ணன் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1.70 லட்சமும், தியாகதுருகத்தை அடுத்த கொட்டையூரைச் சேர்ந்த முல்லைமாறன் மனைவி பரமேஸ்வரி வங்கிக் கணக்கிலிருந்து ரூ.20ஆயிரம் இதே முறையை பின்பற்றி பணம் எடுக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து புகார்கள் வந்த நிலையில், கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் மு.பாண்டியன் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் வெள்ளிக்கிழமை காலை ரோந்துப் பணியில் ஈடுபட்டார். அப்போது, அங்குள்ள ஏ.டி.எம். மையத்திலிருந்து சந்தேகமளிக்கும் வகையில் வெளியே வந்த இருவரைப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்.
அதில், அவர்கள் புதுதில்லி, கான்பூரைச் சேர்ந்த ஸ்ஷாம்சிங் மகன் சோனுகுமார் (24), புதுதில்லி நஜப்பார் பகுதியைச் சேர்ந்த நிர்மல் குமார் மகன் ககன்குமார் (32) என தெரிய வந்தது.
மேலும், கடந்த 20.3.2016-இல் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்கச் சென்ற ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ருக்குமணியிடம் உதவுவது போல நடித்து வேறு ஏடிஎம் அட்டையைக் கொடுத்து அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்து 985 திருடியது தெரியவந்தது.
அந்தப் பணத்தில் ரூ.1.30 லட்சம் மதிப்பில் ஒரு மோட்டார் சைக்கிள், உயர்ரக செல்லிடப்பேசி, 3 தங்க மோதிரம் வாங்கியுள்ளனர். அவற்றையும் ரூ.1 லட்சத்து 18ஆயிரம் ரொக்கத்தையும், 52 போலி ஏ.டி.எம். அட்டைகளையும் கைப்பற்றிய போலீஸார், அவர்கள் இருவரையும் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com