மோடியுடன் ஓபிஎஸ் என்ன பேசினார்? மைத்ரேயன் சூசகத் தகவல்

தமிழக அரசியல் நிலவரங்களை பிரதமர் மோடியும், ஓ.பன்னீர்செல்வமும் விரிவாகப் பேசிக்கொண்டதாக மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் சூசகமாகக் கூறினார்.
மோடியுடன் ஓபிஎஸ் என்ன பேசினார்? மைத்ரேயன் சூசகத் தகவல்

தமிழக அரசியல் நிலவரங்களை பிரதமர் மோடியும், ஓ.பன்னீர்செல்வமும் விரிவாகப் பேசிக்கொண்டதாக மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் சூசகமாகக் கூறினார்.

விழுப்புரத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில், மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் முன்னிலை வகித்துப் பேசியதாவது: நமது தர்மயுத்தம் தொடங்கிய பிறகு, முதன்முதலாக காஞ்சிபுரம், சேலம், திண்டுக்கல், விழுப்புரம் என கூட்டங்களை நடத்தியுள்ளோம். இதனிடையே, பிரதமரை ஓபிஎஸ் சந்திக்க மே 17-ஆம் தேதி மாலை அனுமதி கேட்டோம். மே 19-மாலையில் சந்திக்க அனுமதி வழங்கினர்.

ஓபிஎஸ்சை சந்திக்கச் சென்றபோது, பிரதமர் மோடி ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவர், ஓபிஎஸ்சின் கையைப் பிடித்து தொடர்ந்து கைகுலுக்கியதால், உங்களை எப்போதும் கைவிடமாட்டேன் என சூசகமாகக் காட்டிவிட்டார்.

தமிழக மக்கள் பிரச்னை தீர்க்கும் 9 அம்சக் கோரிக்கைகளை பிரதமர் கேட்டறிந்தார். மாலை 5.10 மணி முதல் 5.45 வரை இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது, தமிழகத்தில் ஜெயலலிதா மறைந்ததிலிருந்து, தற்போது வரை என்ன நடந்தது என்று ஓபிஎஸ் விளக்கிக் கூறினாரா, 122 எம்எல்ஏக்கள் ஆட்சியாளர்கள் பக்கம், ஆனால், ஒட்டுமொத்த கட்சியினர் உங்கள் பக்கம் இருக்கிறார்களே என்று பிரதமர் கேட்டாரா, தமிழக ஆட்சியின் கேலிக்கூத்து, அமைச்சர்களின் முறைகேடு நிலவரங்களை ஓபிஎஸ், பிரதமரிடம் தெரிவித்தாரா, முதல்வர் எடப்பாடியும், பிரதமர் இடையே சமரசம் ஏற்பட்டதாக சில தகவல் தமிழகத்தில் பரவுகிறதே அதுபற்றி ஓபிஎஸ், பிரதமரிடம் பேசினாரா, தமிழக ஆட்சியும், கட்சியும் இன்னும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறதா, எடப்பாடி ஆட்சியின் நிலைகுறித்து பேசினரா என்று எனக்குத் தெரியவில்லை. (இவ்வாறு நகைப்புடன் சூசகமாக, பிரதமர்-ஓபிஎஸ் சந்திப்புக்கான தகவலை வெளிப்படுத்தினார் மைத்ரேயன், இதனை சிரித்தபடியே ஆமோதித்தார் ஓபிஎஸ்). ஆனால், பேச்சின் நிறைவாக, நான் எப்போதும் உங்களுடன் இருக்கிறேன் என்று பிரதமர் மோடி, ஓபிஎஸ்ஸிடம் உறுதியளித்து வாழ்த்தினார். இதில், 10 சதவீதம் தகவலைத் தான் கூறியுள்ளேன் என்றார் மைத்ரேயன்.

கூட்டத்தில் தலைமை வகித்து இரா.லட்சுமணன் எம்.பி. பேசியதாவது: தமிழகத்தை சிறப்புத் திட்டங்களால் மிளிர வைத்த ஜெயலலிதாவின் மறைவுக்கு நீதிகேட்டு நிற்கிறார் ஓபிஎஸ். அவர் வர்தா புயல் பாதிப்பை சீர்படுத்தியவர், ஆந்திர முதல்வரைச் சந்தித்து நதிநீரைப் பெற்றவர், ஜல்லிக்கட்டை நடத்தியவர். இதனை ஏற்காதவர்கள் அவரை பதவி விலகச் செய்துவிட்டனர். விரைவில் ஓபிஎஸ் தலைமையில் மக்களாட்சி மலரும்.

மாஃபா பாண்டியராஜன்: ஜெயலலிதா இறந்த மர்மம் விலக வேண்டும், சசிகலா கும்பலிடமிருந்து கட்சியை மீட்க வேண்டும், ஜெயலலிதா பொற்கால ஆட்சி தொடர வேண்டும். இதுவே நமது லட்சியம். தர்மயுத்தத்துக்காக மக்கள் சக்தியைத் திரட்டி அடுத்த கட்ட போராட்டத்துக்கு செல்வோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் ப.மோகன்: தமிழகத்தில் இன்னும் ஒரு வாரத்துக்குள் மிகப்பெரிய அதிர்வலை ஏற்பட உள்ளது. ஓபிஎஸ்சின் ரயில் புறப்பட்டுவிட்டது. வருபவர்கள் வரலாம். இதுவே கடைசி அழைப்பு என்று பேசினார்.

கூட்டத்தில், ராஜேந்திரன் எம்.பி., வரவேற்றார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார். அவைத் தலைவர் மதுசூதனன், முன்னாள் சட்டப் பேரவைத் தலைவர் பி.எச்.பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், செம்மலை, ஜெயபால், ராஜகண்ணப்பன், பிரபாகரன், சண்முகநாதன், முன்னாள் எம்பி மனோஜ்பாண்டியன், முன்னாள் எம்எல்ஏ சிவராஜ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

மேலும், ஒன்றியச் செயலாளர் ராமதாஸ், ஸ்ரீதர், நகர அவைத் தலைவர் அன்பழகன், முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினர் செங்குட்டுவன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் சிவா, தகவல் தொழில் நுட்ப அணி மணவாளன், இலக்கிய அணி பாலாஜி, ராஜாங்கம், செஞ்சி சரவணன், கதிரவன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com