ரயில்வே மேம்பாலப் பணிக்காக நாளை முதல் பாண்டி சாலை மூடல்

விழுப்புரம் ரயில்வே மேம்பாலப் பணி தொடங்க உள்ளதால், வருகிற ஞாயிற்றுக்கிழமை (மே 28) முதல் விழுப்புரம்-கிழக்கு பாண்டி சாலை

விழுப்புரம் ரயில்வே மேம்பாலப் பணி தொடங்க உள்ளதால், வருகிற ஞாயிற்றுக்கிழமை (மே 28) முதல் விழுப்புரம்-கிழக்கு பாண்டி சாலை மூடப்படுகிறது. இதற்கான மாற்று சாலைகளைப் பயன்படுத்த ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விழுப்புரம், கிழக்கு பாண்டி சாலையிலுள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் செல்லும் கோலியனூரான் வாய்க்காலில் சிறு பாலம் அமைக்கும் பணி தொடங்க உள்ளதால், ஞாயிற்றுக்கிழமை
(மே 28) அந்த சாலை மூடப்படுகிறது. இதனால், கிழக்கு பாண்டி சாலையில் மாதா கோவில் எதிரே தாற்காலிகப் பேருந்து நிலைய வசதி செய்யப்பட்டுள்ளது.
கனரக வாகனங்களுக்கு மாற்றுப்பாதை: விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி, கடலூர், பண்ருட்டி வழித்தடங்களில் செல்லும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள், இனி புதிய பேருந்து நிலையம் அருகே திரும்பி எல்லீஸ்சத்திரம் சாலை வழியாக சென்னை தேசிய நெடுஞ்சாலையை அடைந்து, அங்கிருந்து விக்கிரவாண்டி மேம்பாலம் வழியாகச் சென்று, இடதுபுறம் கும்பகோணம் சாலையில் திரும்பி, கோலியனூர் கூட்டுச் சாலை சென்று உரிய ஊர்களுக்குச் செல்ல வேண்டும்.
தாற்காலிக பேருந்து நிலையம்: விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி, கடலூர், பண்ருட்டி வழித்தடங்களில் சென்று வரும் அரசு, தனியார் பேருந்துகள், நகரப் பேருந்துகள், இனி புதிய பேருந்து நிலையத்துக்குச் செல்லாமல், அதற்கு பதிலாக மாதா கோவில் எதிரே அமைக்கப்பட்டுள்ள தாற்காலிகப் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்ல வேண்டும்.
இப்பேருந்துகள், புதிய பேருந்து நிலையத்தில் தற்பொழுது பின்பற்றப்படும் அதே நேர (டைமிங்) அட்டவணையைப் பின்பற்றலாம்.
திருக்கனூர் வழித்தட வாகனங்கள்: விழுப்புரத்திலிருந்து பனையபுரம்-திருக்கனூர் வழியாகச் சென்று வரும் பேருந்துகள், விக்கிரவாண்டி மேம்பாலம் வழியாகச் சென்று கோலியனூர் சாலையை அடைந்து பனையபுரம் வழியாகச் செல்ல வேண்டும்.
திரும்ப வரும்போது வழக்கம் போல் பனையபுரம் வழியாக முண்டியம்பாக்கம் மேம்பாலம், அணுகு சாலை வழியாக, சென்னை தேசிய நெடுஞ்சாலையை அடைந்து, விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்து சேர வேண்டும்.
விழுப்புரம்-கும்பகோணம் வழித்தட பேருந்துகள்: சென்னையிலிருந்து விழுப்புரம் பேருந்து நிலையத்துக்கு வந்து பண்ருட்டி வழியாக சிதம்பரம், நெய்வேலி, கும்பகோணம் செல்லும் பேருந்துகள், இனி விழுப்புரம் வந்து அரசூர், புதுப்பேட்டை, பண்ருட்டி வழியாக சம்பந்தப்பட்ட ஊர்களுக்குச் செல்ல வேண்டும். திரும்பி வரும் போதும் அதே வழியை பின்பற்ற வேண்டும்.
கார், பைக்குகளுக்கு மாற்றுப்பாதை: விழுப்புரத்திலிருந்து பாண்டி-கடலூர் செல்லும் இலகுரக வாகனங்கள் கார், ஜீப் மற்றும் இரு சக்கர வாகனங்கள் அனைத்தும் விழுப்புரம் காந்தி சிலையிலிருந்து இடதுபுறம் திரும்பி, திருவிக வீதி, நாப்பாளையத்தெரு, தரைப்பாலம் கீழ்ப்பெரும்பாக்கம், காகுப்பம் வழியாக கிழக்கு பாண்டி சாலையை அடைய வேண்டும்.  இதே போல, எதிரே கோலியனூரிலிருந்து விழுப்புரம் வரும் இலகு ரக வாகனங்களான கார், ஜீப் மற்றும் இருசக்கர வாகனங்கள் அந்த பாதையையே பயன்படுத்தி, திரும்பி வந்து, நாப்பாளையத்தெரு, சிவன் கோவில், வடக்குத் தெரு, புதுத் தெரு, வண்டிமேடு வழியாக விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.
இந்த தாற்காலிக ஏற்பாடுகள், ரயில்வே மேம்பாலப் பணிகள் தொடங்கப்படும் (மே 28) ஞாயிற்றுக்கிழமை முதல் பணி முடிவடையும் நாள் வரை, சுமார் 5 மாதங்கள் அமலில் இருக்கும். இப்பணிக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார். காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜசேகரன், கோட்டாட்சியர் அ.ஜீனத்பானு, வட்டார போக்குவரத்து அலுவலர் பாலகுருநாதன், அரசுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளர் நடராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com