டெங்கு பாதிப்பு: மேலும் ஒரு தொழிலாளி சாவு

விழுப்புரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அந்த நோயால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு தொழிலாளி உயிரிழந்தார்

விழுப்புரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அந்த நோயால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு தொழிலாளி உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வந்தது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், திருக்கோவிலூர், திண்டிவனம் உள்ளிட்டப் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 12 பேர் வரை உயிரிழந்தனர். இவர்கள், விழுப்புரம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆரம்ப சிகிச்சை பெற்று, தீவிர சிகிச்சைக்காக, புதுவை, சேலம் உள்ளிட்ட மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தனர்.
ஆனால், விழுப்புரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் ஒருவரும் உயிரிழக்கவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்து வருகிறது. எனினும், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் கடந்த மாதம் முதலே துரிதப்படுத்தியது. இதனால், கடந்த 10 நாள்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறையத் தொடங்கியது.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில், டெங்கு காய்ச்சல் பாதிப்பில் மேலும் ஒருவர் உயிரிழந்தது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொழிலாளி சாவு: கண்டமங்கலம் அருகேயுள்ள பள்ளிப்புதுப்பட்டு பழைய காலனி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளிஜெயபால் (50) கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக காய்ச்சல் பாதிப்பில் இருந்தார்.
அவர், கடந்த 4 நாள்களுக்கு முன்பு, அருகேயுள்ள கரிக்கலாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இரு தினங்களுக்கு முன்பு ரத்த வாந்தி எடுத்த அவர், புதுவை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு டெங்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு சிகிச்சையளித்தனர். எனினும் வியாழக்கிழமை இரவு அவர் உயிரிழந்தார்.
டெங்கு பாதிப்பில் 23 பேர் அனுமதி: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த செப்.29 முதல் தொடங்கியுள்ள டெங்கு சிறப்பு சிகிச்சை மையத்தில் இதுவரை 7ஆயிரம் பேர் காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெற வந்தனர். அதில், தீவிர காய்ச்சல் பாதிப்பால் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்ட 1,300 பேரில், 412 பேர் வரை டெங்கு பாதிப்பு தடுப்பு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
தற்போது, 130 பேர் தீவிர காய்ச்சலில் உள் நோயாளிகளாக உள்ளனர். அதில், 23 பேருக்கு டெங்கு பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழப்பு ஏதும் இல்லை என்று அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் வனிதாமணி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com