திருநங்கைகளுக்கான தொழில் பயிற்சி முகாம்

விழுப்புரம் தொழில் மையத்தில் திருநங்கைகளுக்கு பனை ஓலையில் கைவினைப் பொருள்கள் தயாரித்தல் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

விழுப்புரம் தொழில் மையத்தில் திருநங்கைகளுக்கு பனை ஓலையில் கைவினைப் பொருள்கள் தயாரித்தல் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையத்தின்கீழ் இயங்கும், சென்னையில் உள்ள மத்திய பனைவெல்லம் மற்றும் பனை பொருள்கள் நிறுவனம், விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில் திருநங்கைகளுக்கு தொழில் முனைவோர் பயிற்சி மற்றும் பனை ஓலையில் கைவினைப் பொருள்கள் தயாரித்தல் குறித்த 10 நாள்கள் பயிற்சி முகாம் தொடக்க நிகழ்ச்சி விழுப்புரம் மாவட்ட தொழில் மையத்தில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
தொழில் மையத்தின் பொது மேலாளர் ராஜகணேஷ் தலைமை வகித்தார். விழுப்புரம் மக்கள் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் உமா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மத்திய கதர் மற்றும் கிராமத் தொழில் ஆணையத்தின் மாநில இயக்குநர் லட்சுமிநாராயணன் கலந்து கொண்டு, இந்த முகாமைத் தொடக்கி வைத்து பேசியதாவது: பனை ஓலைகளைக் கொண்டு பல்வேறு கைவினைப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. அதற்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. ஆகவே, திருநங்கைகளுக்கு பனை ஓலையைக் கொண்டு கைவினைப் பொருள்கள் தயாரித்தல் குறித்து சிறப்பு பெற்ற பயிற்றுநர்கள் மூலம் 10 நாள்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், தொழில் முனைவு செய்தல் குறித்தும் பயிற்சி அளிக்கப்படும்.
இங்கு பயிற்சி பெறும் திருநங்கைகள், பனை ஓலைகளைக் கொண்டு கைவினைப் பொருள்களைத் தயாரித்து வருமானம் ஈட்டலாம். ஆகவே, பயிற்சி முடிந்து தொழில் முனைவோராக மாற வேண்டும்.
திருநங்கைகள் தொழில் செய்து, முன்னேற்றமடைந்தால் இந்திய அளவில் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். இவர்களைப் போலவே, தமிழகத்தில் 1,000 திருநங்கைகள் தொழில் முனைவோராக உருவாக வேண்டும்.
அப்படி, தொழில் தொடங்கி இவர்கள் உற்பத்தி செய்யும் பனை ஓலைப் பொருள்களை கொள்முதல் செய்து, அவர்களுக்கு உரிய பணத்தை பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே, திருநங்கைகள் மற்றுமின்றி மற்றவர்களும் தொழில் முனைவு செய்ய வேண்டும் என்றார்.
மத்திய பனைவெல்லம் மற்றும் பனை பொருள்கள் நிறுவனத்தின் முதல்வர் பாண்டியன் உள்ளிட்டோர் ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com