மணல் திருட்டைத் தடுக்க சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்படுமா?

விழுப்புரம் மாவட்டத்தில் தொடரும் மணல் திருட்டை தடுக்க காவல் துறையில் சிறப்புப் பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் தொடரும் மணல் திருட்டை தடுக்க காவல் துறையில் சிறப்புப் பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தென்னிந்தியாவின் முக்கிய நதிகளில் ஒன்றான தென்பெண்ணை ஆறு, திருவண்ணாமலை மாவட்டத்தைக் கடந்து விழுப்புரம் மாவட்டத்தில் மணலூர்பேட்டையில் தொடங்கி கண்டரக்கோட்டை வரை சுமார் 75 கி.மீ. தொலைவுக்கு பயணிக்கிறது. மாவட்டத்தின் பிரதான நதியான இந்த தென்பெண்ணையில், திருக்கோவிலூர் அருகே வடக்குநெமிலியில் அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரிதான் வட தமிழகத்துக்கு மணல் வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆன்-லைன் மூலமாக பதிவு செய்யும் லாரிகளுக்கு இங்கிருந்து பொக்லைன் இயந்திரம் மூலமாக மணல் நிரப்பப்படுகிறது.
அதேபோல, விழுப்புரம் அருகே கண்டமானடி அடுத்த சித்தாத்தூர் திருக்கை பகுதியில் மாட்டு வண்டிகளுக்கான மணல் எடுக்கும் மையம் செயல்படுகிறது. அங்கு, டிராக்டரில் மணல் எடுத்து வந்து, அருகிலேயே கொட்டி வைத்து, லாரிகள் மூலமாக கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது. இவ்விரு குவாரிகள் மட்டுமே அரசின் மூலமாக இயங்கி வருகின்றன. இங்கு அரசு நிர்ணயித்துள்ள தொகை, ஒரு யூனிட் மணல் லாரிகளுக்கு ரூ.550, மாட்டு வண்டிக்கு ரூ.63 ஆகும். இங்கிருந்து, வெளிமாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் மணல், சென்னை போன்ற நகரங்களில் ரூ.35 ஆயிரம் வரை விற்பனையாகிறது.
இந்த அதிகப்படியான வருமானத்தை குறி வைத்து, விழுப்புரம் மாவட்ட தென்பெண்ணை ஆற்றில் பல இடங்களில் மணல் திருட்டு, கடத்தலில் கும்பல் ஈடுபடுகிறது.
குறிப்பாக, விழுப்புரம் அருகேயுள்ள பரனூர், அரகண்டநல்லூர், கல்பட்டு, தெளி, மரகதபுரம், பிடாகம், குச்சிப்பாளையம், காவணிப்பாக்கம், கண்டரக்கோட்டை போன்ற பகுதிகளிலும், ஏனாதிமங்கலம், பேரங்கியூர், கரடிப்பாக்கம், பையூர், மரங்கியூர் உள்ளிட்ட பகுதிகளின் மணல் திருட்டு நடக்கிறது. மணலைத் திருடி லாரி, டிராக்டர்களில் கொண்டு செல்ல பொக்லைன் இயந்திரங்களும் பகிரங்கமாக பயன்படுத்தப்படுகின்றன.
அரசு குவாரியில் லாரிகளில் வரிசையாக நாள் கணக்கில் நிறுத்தி வைத்து மணல் அள்ளுவதைவிட, திருட்டு மணல் அள்ளுவது இந்த நடைமுறை மணல் கடத்தல் கும்பலுக்கு எளிதாய்ச் சாத்தியமாகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் சரிவு, விவசாயம் பாதிப்பு, குடிநீர் பற்றாக்குறை போன்ற பாதிப்புகள் தொடர்கின்றன.
மேலும், ஆறுகளில் வரையறையின்றி மணல் அள்ளுவதால் உருவாகும் பெரும் பள்ளங்கள், மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி, குளித்து மகிழ வரும் சிறார்களின் உயிரைப் பறித்து விடும் சம்பவங்களும் அண்மைக்காலமாக அரங்கேறி வருகின்றன. இதனால் மணல் கடத்தல், திருட்டு சம்பவங்களை தடுக்க காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், விவசாயிகள் தொடர்ந்து குரலெழுப்பி வருகின்றனர்.
சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்படுமா?: வாகனங்கள் பறிமுதல், அபராதம் போன்ற காவல் துறையின் நடவடிக்கைகள் எல்லாம் மணல் திருட்டு, கடத்தலை கட்டுப்படுத்த போதாது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
மேலும் அவர்கள் கூறுகையில், மது கடத்தல் வாகனங்களை பறிமுதல் செய்து பொது ஏலம் விடுவதுபோல, மணல் கடத்தல் லாரிகளையும் ஏலம் விடும் நடவடிக்கை வேண்டும். அங்கொன்றும் இங்கொன்றுமாக இல்லாமல், லாரிகளில் மணல் கடத்தும் அனைவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வருவாய்த் துறை, காவல்துறை, பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கொண்ட குழுவை ஏற்படுத்தி, ஆற்றங்கரையோர கிராமங்களில் மணல் திருட்டை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் பிரத்யேகமாக அதிகாரிகளை நியமித்து மணல் லாரிகளை சோதனை செய்து உரிய ஆவணங்கள் இல்லாவிடில் உடனடியாக நடவடிக்கை எடுக்கலாம்.
மாட்டு வண்டிகளில் கொண்டு செல்லப்படும் மணல் உள்ளூர் தேவைக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறதா அல்லது அவை ஓரிடத்தில் குவிக்கப்பட்டு, லாரிகள் மூலமாக வெளியூர்களுக்கு கடத்தப்படுகிறதா என்பதை கண்காணித்துத் தடுக்க வேண்டும். காவல் துறையில் மணல் கடத்தல் தடுப்புப் பிரிவை ஏற்படுத்த வேண்டும். மணல் திருட்டு, மணல் கடத்தலுக்குத் துணையாக இருக்கும் அல்லது அதில் சம்பந்தப்பட்ட அரசுத் துறை, காவல்துறையினர் மீதும் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com