கார் கண்ணாடியை உடைத்து ரூ.4 லட்சம் கொள்ளை வழக்கில் ஆந்திரத்தைச் சேர்ந்தவர் கைது

விழுப்புரத்தில் காவல் நிலையம் அருகே பட்டப்பகலில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.4 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஆந்திர மாநிலத்தைச்

விழுப்புரத்தில் காவல் நிலையம் அருகே பட்டப்பகலில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.4 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த மற்றொரு நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியை அடுத்த திருநந்திபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். ஆட்டுப்பண்ணை வைத்துள்ளார். இவர் கூறியபடி, இவரது கார் ஓட்டுநர் கோபால் கடந்த நவ.4-ஆம் தேதி காலை விக்கிரவாண்டியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் இருந்து ரூ.4 லட்சத்தை எடுத்து காரில் வைத்துக்கொண்டு விழுப்புரம் வந்தார். மேற்கு காவல் நிலையம் அருகிலுள்ள வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் பகுதியில் காரை நிறுத்திவிட்டு கடைக்குச் சென்றார்.
அப்போது, மர்ம நபர்கள் காரின் பக்கவாட்டு கண்ணாடியை உடைத்து, அதிலிருந்த ரூ.4 லட்சம் ரொக்கத்தை எடுத்துக்கொண்டு தப்பினர்.
இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து, விழுப்புரம் நகரில் காவல்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்ததில், இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் காரை பின்தொடர்ந்து வந்து, பணத்தைத் திருடியது தெரிந்தது.
பின்னர், அந்த இரு சக்கர வாகனத்தின் பதிவெண்ணைக் கொண்டு, மேற்கு உதவி காவல் ஆய்வாளர் மருது தலைமையிலான தனிப்படையினர் திருத்தணிக்குச் சென்று விசாரித்ததில், ஆந்திர மாநிலம், புத்தூரை அடுத்த ஓ.ஜி. குப்பம் பகுதியைச் சேர்ந்த அனுமந்தராவ் (57) உள்பட இருவர் இந்தத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து, ஓ.ஜி. குப்பம் பகுதியில் தேடிப்பார்த்தும் அனுமந்தராவ் சிக்காததால் தனிப்படையினர் விழுப்புரம் திரும்பினர்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, பைக்கில் வந்த நபர், திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த அனுமந்தராவ் என்பது தெரிய வந்தது. அவரை, போலீஸார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.4 லட்சம் ரொக்கம், திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சென்னை, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ரவி என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்த வழக்கில் துரிதமாகச் செயல்பட்ட தனிப்படையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் மருது, சிறப்பு உதவி ஆய்வாளர் சங்கரவடிவேல், தலைமைக் காவலர் வெங்கடேசன், காவலர்கள் பிரபாகரன், ராஜா ஆகியோரை மேற்கு காவல் ஆய்வாளர் காமராஜ் ஞாயிற்றுக்கிழமை பாராட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com