செஞ்சி காந்தி பஜாரில் நடைபாதை ஆக்கிரமிப்பு: பாதசாரிகள் அவதி

செஞ்சி காந்தி பஜாரில் சாலையின் இருபுறமும் உள்ள நடைபாதையை ஆக்கிரமித்து பழக் கடைகள், மளிகைக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளை

செஞ்சி காந்தி பஜாரில் சாலையின் இருபுறமும் உள்ள நடைபாதையை ஆக்கிரமித்து பழக் கடைகள், மளிகைக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளை வைத்துள்ளனர். இதனால், பொது மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
செஞ்சி கூட்டுச் சாலையில் இருந்து சரவணா தியேட்டர் வரை உள்ள காந்தி பஜார் சாலையின் இருபுறமும் நடைபாதை உள்ளது.  இந்த நடைபாதையை மக்களின் பயன்பாட்டுக்கு விடாமல்,  தடையை ஏற்படுத்தி வணிகர்கள் 100 சதவீதம் ஆக்கிரமிப்பு  செய்துள்ளனர்.
இங்கு பழக் கடை, மளிகைக் கடை, டீ கடை, ஹோட்டல், பூ கடை,  என ஆக்கிரமிப்பு செய்து நடைபாதையை அடைத்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு செஞ்சி உரிமையியல் நீதிமன்ற நீதிபதி வெங்கடேசன், ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.   மேலும், பள்ளி மாணவர்கள் நலன் கருதி காலை முதல் மாலை வரை மாணவர்கள் வந்து செல்லும் பள்ளி நேரத்தில் காந்தி பஜாரில் கனரக வாகனங்கள் செல்லவோ, வாகனங்களை சாலையில் நிறுத்தி சரக்கு இறக்கவோ கூடாது என உத்தரவிட்டார்.  மேலும், பேனர்களுக்கும் தடை விதித்தார்.
ஆனால், நீதிமன்ற உத்தரவை மீறி தற்போது ஆக்கிரமிப்புகள் பெருகி விட்டன. இருபுறங்களிலும் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிடுகின்றனர்.  எஞ்சியுள்ள இடத்தில் பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களும் பொது மக்களும், பள்ளி மாணவர்களும் கடும் சிரமத்திற்கும், ஆபத்தான நிலையிலும் செல்ல வேண்டியுள்ளது.
எனவே, செஞ்சி பேரூராட்சி நிர்வாகம்,  வட்டாட்சியரகம், நெடுஞ்சாலைத் துறை, காவல் துறை ஆகியவை இணைந்து நடைபாதையை மக்கள் பயன்பாட்டுக்கு நிரந்தரமாக கொண்டுவர வேண்டும் என செஞ்சி நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com