வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.20 லட்சம் மோசடி: சென்னையைச் சேர்ந்த இளைஞர் கைது

போலி விசா, விமான டிக்கெட்டுகள் தயாரித்து, 50-க்கும் மேற்பட்டோரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த

போலி விசா, விமான டிக்கெட்டுகள் தயாரித்து, 50-க்கும் மேற்பட்டோரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த சென்னையைச் சேர்ந்த இளைஞரை விழுப்புரம் மாவட்ட போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 52 கடவுச்சீட்டுகள், போலி விசா, விமான டிக்கெட்டுகள், ரூ.2.60 லட்சம் ரொக்கம், கணினி, பிரின்டர், கார்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி பகுதியில் துபையில் வேலை வாங்கித் தருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இதனை நம்பி, அந்த சுவரொட்டியில் இருந்த செல்லிடப்பேசி எண்ணுக்கு பலரும் தொடர்பு கொண்டனர்.
அதில், பேசிய நபர் தனது
பெயர் கார்த்திக் என்றும், சென்னை முகப்பேரில் வெளிநாட்டுக்கு வேலைக்கு ஆள் அனுப்பும் நிறுவனத்தை நடத்தி வருவதாகவும் அறிமுகப்படுத்திக் கொண்டாராம். இதைத்தொடர்ந்து வெளிநாட்டு வேலைக்கு ஆர்வம் காட்டிய கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோரிடம் தலா ரூ.50 ஆயிரம் வசூலித்தாராம்.
பின்னர், விசா, விமான டிக்கெட் உள்ளிட்டவற்றை அனுப்பி வைப்பதாகக் கூறியுள்ளார். நவம்பர் 13-ஆம் தேதி (திங்கள்கிழமை) துபைக்கு செல்வதற்காக பணம் கொடுத்திருந்தவர்கள் தயாராக இருந்தனர். ஆனால், அதற்கு இரு நாள்களுக்கு முன்பு, கார்த்திக் முறையாக பேசாமல் செல்லிடப்பேசி இணைப்பை துண்டித்தார்.
இதனால், வேலைக்கு பணம் கொடுத்தவர்கள் சந்தேக
மடைந்து விசாரித்ததில், அவர் மோசடி நபர் எனத் தெரிய வந்தது. இதையடுத்து,  பணம் கொடுத்து ஏமாந்த 42 பேர் கடந்த 11-ஆம் தேதி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இந்தப் புகார் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப் பிரிவு டி.எஸ்.பி. கோமதிக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயசங்கர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் கார்த்திக்கை ரகசியமாகத் தொடர்பு கொண்டு வெளிநாட்டில் வேலை வேண்டும், அதற்கு பணம் தருவதாகக் கூறி, ஞாயிற்றுக்கிழமை அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
 அவரிடம் இருந்த 52 கடவுச் சீட்டுகள், போலி விசாக்கள், விமான டிக்கெட்டுகள், ரூ.2.60 லட்சம் ரொக்கம்,  கணினி, மடிக்கணினி, சொகுசு கார், விலை உயர்ந்த செல்லிடப்பேசிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், அவரது உண்மையான பெயர் அருண்ராஜ்(30), சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் உண்மையான ஒரு விசாவை வைத்து போலியாக 51 விசாக்கள் தயாரித்ததும், ஒரு விமான டிக்கெட்டை வைத்து 51 போலி விமான டிக்கெட்டுகள் தயாரித்ததும் தெரிய வந்தது. மொத்தம் ரூ.20 லட்சத்துக்கும் மேல் அவர் மோசடி செய்துள்ளார்.
எதிரியை 24 மணி நேரத்தில் கைது செய்ததால், அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல இருந்தது தடுக்கப்பட்டது என்றார் எஸ்.பி. ஜெயக்குமார்.
இந்த வழக்கில் விரைவாக செயல்பட்ட டி.எஸ்.பி. கோமதி, காவல் ஆய்வாளர் ஜெயச்சந்திரன், உதவி ஆய்வாளர் அண்ணாதுரை, காவலர் பிரபா ஆகியோரை எஸ்.பி. பாராட்டினார்.
எஸ்.பி. அறிவுரை: பின்னர் எஸ்.பி. ஜெயக்குமார் கூறுகையில், வெளிநாட்டு வேலைக்கு செல்வோர், அரசிடம்  அனுமதி பெற்ற டிராவல்ஸ் ஏஜென்சிகளை மட்டுமே அணுக வேண்டும். சரியாக விசா வழங்கப்பட்டுள்ளதா என அந்நாட்டு தூதரகத்தைத் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ள வேண்டும். போலி ஏஜென்சிகள் குறித்து தெரிய வந்தால், உடனடியாக
காவல் துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com