விக்கிரவாண்டி பகுதியில் டெங்கு தடுப்புப் பணிகள் ஆய்வு

விக்கிரவாண்டி பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.

விக்கிரவாண்டி பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.
 விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த் துறை, சுகாதாரத் துறை சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் நேரில் ஆய்வு செய்து கண்காணித்து வருகின்றனர்.
 இதன் தொடர்ச்சியாக செவ்வாய்க்கிழமை விக்கிரவாண்டி ஒன்றியம், கப்பியாம்புலியூர் ஊராட்சியில் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்குள்ள கங்கையம்மன் கோவில் தெரு, முத்துமாரியம்மன் கோவில் தெரு, தியாகராஜன் தெரு, பெருமாள் கோயில் தெரு, முருகன் கோயில் தெரு மற்றும் கப்பியாம்புலியூர் காலனி பகுதிக்கு உள்பட்ட அம்பேத்கர் தெரு, பெரியாண்டவர் கோயில் தெரு, அண்ணா வீதி, விநாயகர் கோயில் வீதி, கக்கன் வீதி ஆகிய இடங்களில் வீடு, வீடாகச் சென்று தண்ணீர்த் தொட்டிகளில் கொசுப்புழுக்கள் உள்ளதா என்றும், வீட்டில் கீழே பொட்டு வைத்துள்ள பழைய டயர்கள், மண்பாண்டங்கள், பிளாஸ்டிக் பொருள்கள், தேங்காய் ஓடுகள், ஆட்டுரல்கள் ஆகியவற்றில் நீர் தேங்கி இருந்ததைக் கண்டறிந்து, அதனை அகற்ற ஆட்சியர் உத்தரவிட்டார்.
 அப்போது, அங்கிருந்த பொதுமக்கள், அரசுப் பள்ளி மாணவர்களிடம், கொசுப்புழுக்கள் உற்பத்தி குறித்து கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்தும், டெங்கு கொசு ஒழிப்பு குறித்தும் விளக்கிக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியை சுத்தமாக பராமரித்தாலே டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் வராமல் தடுக்க முடியும் என்றார் ஆட்சியர்.
 ஆய்வின்போது, ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் வி.மகேந்திரன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சௌண்டம்மாள், ஊராட்சிகள் உதவி இயக்குநர் ஸ்ரீனிவாசன், விக்கிரவாண்டி வட்டாட்சியர் மனோகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறவாழி, முபாரக் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்கள் உடனிருந்தனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com