சாலை விபத்துகளைக் குறைக்க விழிப்புணர்வு மையங்கள்: வாகன விற்பனையகங்களில் தொடக்கம்

தமிழகத்தில் சாலை விபத்துகளைக் குறைக்கும் பொருட்டு, வாகன விற்பனையகங்களில் விழிப்புணர்வு பயிற்சி மையங்கள் (ரோடு சேப்டி கார்னர்) கட்டாயப்படுத்தப்பட்டு, தொடங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சாலை விபத்துகளைக் குறைக்கும் பொருட்டு, வாகன விற்பனையகங்களில் விழிப்புணர்வு பயிற்சி மையங்கள் (ரோடு சேப்டி கார்னர்) கட்டாயப்படுத்தப்பட்டு, தொடங்கப்பட்டுள்ளன.
 தமிழகத்தில் நிகழும் சாலை விபத்துகளில் 50 சதவீதத்துக்கும் மேலான உயிரிழப்புகள் இருசக்கர வாகன விபத்தால் தான் ஏற்படுகின்றன. நிகழ் ஆண்டில் இதுவரை நடந்த 19 ஆயிரத்து 237 இரு சக்கர வாகன விபத்துகளில் 4,291 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், தலைக்கவசம் அணியாமல் சென்று உயிரிழந்தோர் 2,279 பேர்.
 தமிழகத்தில் தொடரும் சாலை விபத்துகளைத் தடுக்க வட்டாரப் போக்குவரத்து, காவல் துறை, மாவட்ட நிர்வாகம் இணைந்து விபத்து தடுப்பு நடவடிக்கைகளை அண்மைக் காலமாக தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. மாவட்டங்கள் தோறும் ஆட்சியர் தலைமையில் சாலைப் பாதுகாப்புக் குழு அமைக்கப்பட்டு, ஆய்வு செய்து, விபத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக, தனியாக ஒரு ஏடிஜிபி தலைமையிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
 இதன் ஒரு பகுதியாக, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பயிற்சி மையங்கள் அமைத்து அதில், விடியோ பட காட்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, தற்போது, வாகன விற்பனையகங்களிலும், இத்தகைய விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை ஆணையர் தயானந்த்கட்டாரியா புதிய உத்தரவைப் பிறப்பித்து, இருசக்கர வாகன விற்பனையகங்களில் (பைக் ஷோ-ரூம்கள்) "ரோடு சேப்டி கார்னர்' என்ற பெயரில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி மையங்களை தொடங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
 நீண்ட தொலைவு நெடுஞ்சாலைகளைக் கொண்ட விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள, அனைத்து இருசக்கர வாகன விற்பனையகங்களிலும் இந்த பயிற்சி மையங்கள் தற்போது அமைக்கப்பட்டுள்ளன. இந்த பயிற்சி மையத்தில், சாலைப் பாதுகாப்பு, போக்குவரத்து விதிமுறைகளைத் தெரிவிக்கும் விடியோ காட்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. மேலும், சாலைப் பாதுகாப்பு வாசகங்கள், சாலைக் குறியீடுகள் போன்றவையும் வைக்கப்பட்டுள்ளன.
 இருசக்கர வாகனங்கள் வாங்க வருவோரை இந்த மையத்தில் போக்குவரத்து விழிப்புணர்வு பெறச் செய்ய வேண்டும். இதற்கான ஒரு படிவத்தில், வாகனம் வாங்க வந்தவரும், வாகன விற்பனையாளரும் பயிற்சி வழங்கியதை உறுதி செய்து கையெழுத்திட்டு வைத்திருக்க வேண்டும். இதனை வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர்கள் அவ்வப்போது ஆய்வு செய்வர்.
 விழுப்புரத்தில் 9 இடங்களில் உள்ள இருசக்கர விற்பனையகங்களில் ரோடு சேப்டி கார்னர் மையத்தை, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பாலகுரு, ஆய்வாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
 அப்போது அவர்கள் கூறியதாவது: விழுப்புரத்தில் நிகழ் ஆண்டு உயிரிழப்பை ஏற்படுத்திய 228 சாலை விபத்துகளில், 128 விபத்துகள் இருசக்கர வாகன விபத்துகளாகும். விதிமீறிய 2,310 பேரின் உரிமங்களை பறிமுதல் செய்து, அதில் 1,555 உரிமங்களை தாற்காலிகமாக ரத்து செய்துள்ளோம்.
 தற்போது, வாகன விற்பனையகங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதால் விபத்துகள் குறையும். தொடர் நடவடிக்கை மூலம் மாவட்டத்தில், 30 சதவீத விபத்துகள் குறைக்கப்பட்டுள்ளன என்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com