உடல் ஆரோக்கியத்துக்கு விளையாட்டையும் ஓர் அங்கமாகக் கொள்ள வேண்டும்: எஸ்.பி.

உடல் ஆரோக்கியத்துக்காக மாணவர்கள் விளையாட்டையும் ஓர் அங்கமாகக் கொள்ள வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தெரிவித்தார்.

உடல் ஆரோக்கியத்துக்காக மாணவர்கள் விளையாட்டையும் ஓர் அங்கமாகக் கொள்ள வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தெரிவித்தார்.
 விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் கல்லூரிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டி (ஸ்பார்டான்ஸ்-2017) புதன்கிழமை தொடங்கியது. இதற்கான தொடக்க விழாவுக்கு கல்லூரி விளையாட்டுப் பிரிவுச் செயலர் ரோபார்டியோ பேஜியோ வரவேற்றார். மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் எம்.எஸ்.ராஜேந்திரன், நிலைய மருத்துவ அலுவலர் புகழேந்தி, அறுவை சிகிச்சைப் பிரிவுத் தலைவர் வெங்கடேஸ்வரன், விளையாட்டுப் பிரிவு இயக்குநர் மருத்துவர் ராஜபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 மருத்துவக் கல்லூரி முதல்வர் எம்.வனிதாமணி தலைமை வகித்துப் பேசியதாவது: விழுப்புரத்தில் மருத்துவக் கல்லூரிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள் முதல் முறையாக நடைபெறுகின்றன. மாணவர்கள் விளையாட்டிலும் ஆர்வம் கொண்டு சாதிக்க வேண்டும். விளையாட்டில் தொடர்புடையவர்கள் தனித்துவம் பெறுகின்றனர். மருத்துவ மாணவர்கள் விளையாட்டு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என்றார். விளையாட்டுப் போட்டிகளைத் தொடக்கி வைத்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் பேசியதாவது: கல்லூரி காலத்தில், தமிழக விவசாயப் பல்கலைக்கழகத்தில் கைப்பந்து வீரராக இருந்தும் மூன்று ஆண்டுகள் அணித் தலைவராகவும் பணியாற்றி நாடு முழுவதும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுக்கோப்பைகளை வென்றுள்ளேன். ஒவ்வொரு மாணவரும் ஏதேனும் ஒரு விளையாட்டில் பங்கேற்க வேண்டும். இதுவே மன அழுத்தத்திலிருந்து விடுபட நல்வழியாக அமையும். நம் உடல் ஆரோக்கியத்துக்கு நடைபயிற்சி மட்டுமல்ல விளையாட்டும் அவசியமாகும். எதிர்கால நோயிலிருந்து பாதுகாக்க, ஆரோக்கியத்தை பேண மாணவர்கள் விளையாட்டையும் ஒரு அங்கமாகக் கொள்ள வேண்டும் என்றார்.
 அக்.7-ஆம் தேதி வரை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. மாணவர்களுக்கு கைப்பந்து, கிரிக்கெட், வலைப்பந்து, கையுந்துப் பந்து, புட்பால், இறகுப் பந்து, கேரம், சதுரங்கம், நீச்சல் உள்ளிட்டப் போட்டிகளும், மாணவிகளுக்கு துரோ பால், பேட்மிட்டன், கேரம், சதுரங்கம், டேபிள் டென்னிஸ் உள்ளிட்டப் போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.
 தமிழகம், புதுவை மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட விளையாட்டு அணியினர் பங்கேற்கின்றனர். கல்லூரி உள் விளையாட்டரங்கிலும், விழுப்புரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மைதானங்களிலும் போட்டிகள் நடைபெற உள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com