சுகாதாரமற்ற இனிப்பு தயாரிப்பகத்துக்கு "சீல்': விழுப்புரத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிரடி

விழுப்புரத்தில் இனிப்பகங்கள், பேக்கரிகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டதில்,  சுகாதாரமின்றி இயங்கிய ஒரு இனிப்பகத்தின் தயாரிப்பிடத்துக்கு சீல் வைத்தனர்.

விழுப்புரத்தில் இனிப்பகங்கள், பேக்கரிகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டதில்,  சுகாதாரமின்றி இயங்கிய ஒரு இனிப்பகத்தின் தயாரிப்பிடத்துக்கு சீல் வைத்தனர்.
விழுப்புரத்தில் தீபாவளிப் பண்டிகையையொட்டி,  இனிப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்களில் கலப்படங்களைத் தடுக்கும் விதத்தில்,  உணவுப் பாதுகாப்புத் துறையினர் இனிப்பகங்களில் வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.  
மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் கு.வரலட்சுமி தலைமையிலான குழுவினர்,  விழுப்புரம் நேருஜி சாலை பழைய பேருந்து நிலையம் எதிரே இருந்த இனிப்பகங்கள்,  பேக்கரிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது,  அங்குள்ள ஒரு இனிப்பகத்தில் கார வகைகள்,  ஹல்வா போன்றவற்றில் அதிக நிறமி கலந்திருப்பதை அறிந்து அதனை ஆய்வுக்காக கைப்பற்றினர்.  மேலும்,  இனிப்புகளில் தயாரிப்பு தேதி இல்லாதது,  இனிப்பு தயாரிப்பிடம் சுகாதாரமற்று இருந்ததை பார்வையிட்டு,  தயாரிப்பிடத்துக்கு சீல் வைத்தனர்.
இதனையடுத்து,  காந்தி வீதி,  நேருஜி சாலைப் பகுதியில் உள்ள இனிப்பகங்கள்,  தயாரிப்புக் கூடங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர்.  இந்த ஆய்வில்,  இனிப்பகங்களில் லேபிள் ஒட்டாமல் இருந்த 10 லிட்டர் குளிர்பானங்கள்,  அதிகம் நிறமேற்றப்பட்ட இனிப்புகள்,  கார வகைகள் 20 கிலோ,  அதிகளவில் சூடுபடுத்தி மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்ட  சமையல் எண்ணெய் 10 லிட்டர் ஆகியவற்றை உணவுப் பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
விதிகளை மீறிய இனிப்பகங்களின் உரிமையாளர்களுக்கு,  உணவுப் பாதுகாப்புத்துறையின் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.  அதிகம் நிறமேற்றப்பட்ட ஹல்வா இனிப்பு மாதிரியை எடுத்து, ஆய்வு அனுப்பி வைத்தனர்.  விழுப்புரத்தில் தொடர்ந்து,  ஆய்வு மேற்கொண்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுப் பாதுகாப்புத் துறையினர் எச்சரித்துள்ளனர்.  ஆய்வின் போது,  வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் சங்கரலிங்கம்,  முருகன், ஜெயராஜ்,  கதிரவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com